பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் சர்தாரி மீதான 7 ஊழல் வழக்குகளையும், அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.
பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெனாசிர் பூட்டோவின் பதவி காலத்தில், அவரது கணவர் சர்தாரி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து,அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், பெனாசிர் மற்றும் அவரது கணவர் சர்தாரி ஆகியோரை, ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கும் வகையில் ஜனாதிபதி முஷாரப் கடந்த அக்டோபரில், தனிச்சட்டம் ஒன்றை இயற்றினார்.
இச்சட்டத்துக்குத் தடைவிதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் முதலில் தடை உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், கடந்த வாரம் அந்தத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, சர்தாரி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் ரெஹ்மான் மாலிக் ஆகியோர் மீதான அனைத்து வழக்குகளையும் அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.
இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்த சர்தாரியின் வழக்கறிஞர் பாரூக் நாயிக், `சர்தாரிக்கு எதிரான அனைத்து வழக்குகளும் அரசியல் உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்டவை என்றும், அவை அடிப்படை ஆதாரமற்றவை' என்றும் தெரிவித்தார்.