* பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
`ஆட்களைக் குறிப்பாக தமிழர்களை கடத்தும் அவலம் மறுபடியும் தலைநகரத்திலும் புறநகர்ப் பகுதிகளான யாழ் நகர், மட்டக்களப்பு, வவுனியா பகுதிகளிலும் இடம்பெறுவது மிகவும் வேதனையைத் தருகின்றது. கடத்தப்பட்ட பலர் தற்போது பொலிஸாரின் பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பொலிஸாரே கடத்தல்களை மேற்கொள்வதாக தமிழ் மக்களிடம் மட்டுமல்ல சகல இன மக்களிடமும் சந்தேகமும் அச்சமும் தோன்றியுள்ளது. இவ்வருடம் தலைநகரில் மாத்திரம் ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 15 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த 1.3.2008 காக்கைதீவு தற்காலிகச் சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்ட திஸ்ஸ வீரசிங்கம் பெனடிக் என்ற 37 வயதுக் குடும்பஸ்தரை பற்றி தகவல் அறிய முடியாமல் உள்ளது. கடத்திக் காணாமல்போயுள்ள 160 பேர் தொடர்பாக என்னிடம் தனிப்பட்ட முறையில் உறவினர்கள் புகார் செய்துள்ளபோது எவ்வளவோ முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தபோதும் பொலிஸாரோ அல்லது கண்டனம் தெரிவிப்பவர்களினாலோ `ஒருவரையேனும்' கண்டுபிடிக்க முடியாத அவல நிலை தொடர்கின்றது. கடத்தப்பட்டவர்களில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 13 பேர் தாமாகவே திரும்பி வந்துள்ளபோதும் தங்களைக் கடத்தியவர்கள் தொடர்பாக கூற மறுத்து மௌனமாகவே இருக்கின்றார்கள்.
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 140 பேரையும் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள 60 பேரையும் நிரபராதிகளாக காணும் பட்சத்தில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தேடுதல் சோதனை என்ற பெயரிலும் யுத்தத்தை காரணமாக வைத்தும் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றோம்.
இதற்கிடையில் அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை மலையக மக்கள் முன்னணி தூதுக்குழு சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யார் சோதனை செய்வது என்ற நிலைமாறி முச்சக்கரவண்டிச் சாரதிகள் பஸ்ஸில் பயணம் செய்வோர் உட்பட பொலிஸார் வீதி காவலுக்கு நிற்கும் இராணுவ, விமானப்படை வீரர்கள் போன்ற சகலரும் இன்று கையில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு செயற்படுவது கண்டனத்திற்குரியது. இவைகளைச் சுட்டிக்காட்டும்போது கொழும்பில் இடம்பெறும் குண்டு வெடிப்புகளை பொலிஸார் சுட்டிக்காட்டி வருகின்றார்கள்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்கள் வலுவடைந்து வருவதும் வாழ்க்கைச் செலவு தாக்கத்தை ஏற்படுத்துவதும் சகல இன மக்களையும் இம்சித்து வருகின்றது. இந்த நிலையில், நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும். யுத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது என்ற நிலைமையை சகலரும் உணர்ந்து செயற்படுவது அவசியமாகும்.