* அநுர குமார திசாநாயக்க கேள்வி
ஜே.வி.பி. எம்.பி.களாகிய தமக்குக் கூட பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற நிலையில் தமிழ் மக்களினால் எவ்வாறு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ள முடியுமென அக்கட்சியின் எம்.பி.யான அநுர குமார திசாநாயக்க சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில புதன்கிழமை இறைவரித் திணைக்களப் பணிப்பாளரின் ஊழல் விசாரணை அறிக்கை இதுவரை சபையில் சமர்ப்பிக்கப்படாமை குறித்து தமது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த அவர் மேலும் தெரிவித்ததாவது;
` அரசாங்கம் நல்லாட்சியை விரும்புவதில்லை. இதனால், பாராளுமன்றம் அர்த்தமற்றதாகி கேலிக் கூத்தாகி விட்டது. அரசியலமைப்பின் சட்டங்கள் உரிய வகையில் பேணப்படுவதில்லை. பாராளுமன்றம் ஒரு புறம் அரசியலமைப்பு மறுபுறம் அமைச்சர்களின் பிடிவாதம் இன்னொரு புறமென சகலதும் குழம்பிப் போயுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எமக்குக் கூட இச்சபையில் நம்பிக்கையற்ற நிலையில், தமிழ் மக்களினால் எவ்வாறு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்?
எனவே, சபாநாயகர் தயவு செய்து இச்சபை மீது நாங்கள் நம்பிக்கைக் கொள்ளுமளவு செயற்பாடுகளை முன்னெடுங்கள். எமது கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளிக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடுங்கள்.
அப்போதுதான் இச்சபை மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வரும். எனவே, அர்த்தமிழந்து, கேலிக்கூத்து நிலைக்குச் சென்றிருக்கும் பாராளுமன்றத்திற்கு அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியும் பொறுப்புக் கூறும் கடமையிலிருந்து விடுபட முடியாது".