* பத்மினி சிதம்பரநாதன் எம்.பி. தெரிவிப்பு
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச சமூகம் கடுமையான அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரண் பத்மினி சிதம்பரநாதன், படுகொலை செய்யப்பட்ட சிவநேசன் எம்.பி.யின் அபிலாசைகளை நிறைவேற்ற தமிழ்க்கூட்டமைப்பு தொடர்ந்து போராடும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிவநேசன் எம்.பி.யின் படுகொலையை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது;
அரச பயங்கரவாதச் செயல்களால் அரசியல்வாதிகள் கல்வியியலாளர்கள், மதத்தலைவர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு நத்தார் ஆராதனையின் போது பாராளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமாகிய ஜோசப் பரராஜசிங்கமும் உயர்பாதுகாப்புப் பகுதியில் வைத்து மாமனிதர் ரவிராஜும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அரசின் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மிகக் கடுமையாக விமர்சித்து வரும் வேளையிலேயே, மேலுமொரு மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. இத்தகைய கொடுமையான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச சமூகம் கடுமையான அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் பாராளுமன்ற அரசியலுக்கு வருவதற்கு முன் பனை வள அபிவிருத்திச் சபையின் முகாமையாளராகப் பணியாற்றி சிறந்த முகாமையாளர் என்ற முத்திரையைப் பதித்தவர். யாழ். மாவட்டம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டம் எனப் பல இடங்களில் கிளைகளை நிறுவி இதனை விரிவாக்கினார். இவருடைய கடுமையான முயற்சியினால் இந்த அபிவிருத்திச் சபையை மிக நல்ல நிலைக்குக் கொண்டு வந்தார்.
சமூக உணர்வும் அரசியல் விழிப்புணர்வும் நிர்வாகத்திறமையும் மிக்க இவர் அடிநிலை மக்களின் மேம்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின் பாராளுமன்ற உறுப்பினர்களையே காணாத பல கிராமங்கள் இவரைக்கண்டு கொண்டது. குறைகளைக் கேட்டுத் தன்னால் முடிந்தவற்றைத் தீர்த்துள்ளார்.
இறுதி நாட்களில் தமிழ் மக்கள் சிங்கள இனவாதிகளால் நடத்தப்படும் முறைகண்டு மிக மன வருத்தம் அடைந்து தமிழ் மக்கள் இனி சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்று தெரிவித்தார். அவரதும் தமிழ் மக்களதும் அபிலாசை மிக விரைவில் வென்றெடுக்கப்படும்.
அவரை இழந்து தவிர்க்கும் மனைவி, நான்கு பிள்ளைகள், உறவினர் மற்றும் சாரதி மகேஸ்வரராஜனின் மனைவி உறவினருடன் எமது ஆழ்ந்த துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.