* மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய தொடர்பாளர் ஞானேஸ்வரி பாலச்சந்திரன் தெரிவிப்பு
எம்.ஏ.எம். நிலாம்
ஷ்ரீலங்கா ஆசிரியைகளின் வலையமைப்பானது இந்த நாட்டு பெண்களின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 1995 ஆம் ஆண்டு முதல் அளப்பெரும் பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்திருக்கும் மேற்படி வலையமைப்பின் தேசிய தொடர்பாளர் திருமதி ஞானேஸ்வரி பாலச்சந்திரன் இந்த அமைப்பு ஆரம்பம் முதலே ஆடம்பரம், விளம்பரமின்றி அமைதியாக நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறினார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மேற்படி அமைப்பு கொழும்பு கேரி கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே திருமதி பாலச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆசிரிய வலையமைப்பின் தலைவர் திருமதி ஏஞ்சலா விஜேசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் திருமதி பாலச்சந்திரன் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் சார்க் மாநாட்டையடுத்து நடைபெற்ற பிராந்திய வலையமைப்புப் பயிற்சிப் பட்டறையின் பின்னர் இலங்கையில் 1995 ஆம் ஆண்டில் ஷ்ரீலங்கா ஆசிரியைகளின் வலையமைப்பு ஒரு கருத்தரங்குடன் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வலையமைப்பானது உலக ஆசிரிய சம்மேளனத்துடன் இணைந்துள்ள சங்கங்களின் ஆசிரியைகளை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
அகில இலங்கை அரச ஆசிரியைகள் சங்கம், இலங்கைத் தமிழாசிரியர் சங்கம், அகில இலங்கை ஆசிரியர் சங்கம், ஷ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கம், இலங்கை ஒருமைப்பாட்டு ஒன்றியம் என்பனவே அவையாகும்.
உலக ஆசிரியர் சம்மேளனம் உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்களை உள்ளடக்கியுள்ளது. உலகில் மூன்று கோடி ஆசிரியர்கள் 169 நாடுகளிலிருந்து 384 சங்கங்கள் மூலம் உறுப்புரிமை பெற்றிருக்கின்றனர். அமைப்பின் பிரதான நோக்கங்கள்
*ஆசிரிய சங்கங்களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
*பெண்களிடையே தன்னம்பிக்கை, மதிப்பு, விழிப்புணர்வு என்பவற்றை அபிவிருத்தி செய்தல்.
*கல்வி கற்றலின் தேவை பெண் குழந்தைகளுக்கும் அவசியம் என்பதை உணர்த்துதலிலுமே, அக்கறை காட்டுதல்.
*இலவசக் கல்வியை யாவரும் பெறுமாறு ஊக்குவித்தல்.
*பெண்களையும், பிள்ளைகளையும் கல்வியிலும், சமூகப் பிரச்சினையிலும் நேரடியாக ஈடுபடச் செய்தல். செயற்பாடுகள்
*பெண்களுக்குக் கருத்தரங்குகள் பயிற்சிகளை நடத்துதல்.
*கல்வி ஆய்வுகளை மேற்கொள்ளல்.
*புத்தாக்க வகுப்புக்கள் நடத்தல்.
*திட்டமிடுவதற்கான மாதாந்த கூட்டங்களை நடத்தல்.
*ஆலோசனையும் வழிகாட்டலுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
இலங்கையில் இன்று ஆசிரியர் பணி புரிவோரில் 80 சதவீதமானவர்கள் பெண்களாவர். ஆனால், செயற்பாடுகளில் பங்கேற்றல், முடிவெடுத்தல், தலைமைத்துவப் பொறுப்பு போன்றவற்றில் அவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
எமது அமைப்பு இப்பொழுது வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களிலும் கவனம் செலுத்தியுள்ளது. அநேகமாக ஊடகங்களின் மூலம் வெளிக்கொணரப்படுகின்றன. உதாரணமாக 17 வயது பணிப்பெண் முஸ்லிம் யுவதியை பொய்யான நம்பிக்கைகளை ஊட்டி வெளிநாட்டிற்கு அனுப்பி தற்போது செய்யாத குற்றத்துக்காக மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் வாடுகின்றார்.
மதுவும், போதைப்பொருளும் தான் வறுமை, பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் யாவும் அதிகரிப்பதற்குக் காரணமாயிருக்கின்றன.
எச்.ஐ.வி., எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளையும் எமது அமைப்பு பாடசாலை மட்டத்தில் மேற்கொண்டு வருகின்றது.
கடல்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பல பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு துரித நடவடிக்கைகளை எமது அமைப்பு மேற்கொண்டது. கடல்கோள் அனர்த்தத்தில் பாதிப்புற்ற ஆசிரியர், மாணவர்களுக்கும் கூடுமான அளவு உதவிகளை வழங்கியுள்ளோம்.
எதிர்காலத்திலும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும் எமது பணிகள் விரிவடைந்ததாகவே காணப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு நிலைகருதி இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை விரிவான அளவில் கொண்டாட வசதிப்படாமை காரணமாகவே எமது பணிகளை தெளிவுபடுத்தும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தத் தீர்மானித்தோம்.
ஊடகவியலாளர் மாநாட்டில் ஏஞ்சலா விஜேசிங்க, திருமதி கே.என். ஷாபி மரிக்கார், திருமதி ஈஜீ. மகேந்திரன், சுமித்தா சில்வா, மாலினி சில்வா ஆகியோரும் விளக்கமளித்தனர்.