* அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்திருப்பது ஜனநாயக சக்திகளை மீண்டும் கவலையடைய வைத்திருக்கும் இன்னுமொரு சம்பவமாகும் என மலையக மக்கள் முன்னணித் தலைருவம் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
"இன பாகுபாடின்றி அனைத்து மக்களின் எதிர்காலமும் அவலத்துக்கு உரியதாக மாறி வருகின்றது.
யுத்தத்தின் முன்னேற்றமென்பது எத்தனை அடிகள் நகர்ந்துள்ளோம் என்பதில் அல்ல தங்கியிருக்கின்றது. மாறாக யுத்தத்தினால், ஏற்படுவதாக நினைக்கும் முன்னேற்றம் என்பது ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்குவதாகவே அமைந்து வருகின்றது.
இன்று அநேகமான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள் அனைத்துமே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றது என்பதனை அரசாங்கத்தின் எல்லா அணுகுமுறைகளையும் அங்கீகரிப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.
ஜீரணிக்க முடியாத செயற்பாடுகளைக் கூட இடித்துரைப்பதற்கு அரசியல் சூழல் இடம் தருவதில்லை என்ற யதார்த்தத்தினை தமிழ் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, தமிழ் அமைப்புகள் அமைதியாக இருப்பது சம்மதம் என எவரும் அர்த்தப்படுத்திவிடக்கூடாது.
எனவே, முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய பொறுப்பில் இருக்கின்ற அரசாங்கம் என்ற ரீதியில் யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு ஏற்ற புதிய சூழலை உருவாக்கவோ அல்லது மாற்று அணுகு முறைகளை பிரயோகிப்பதற்கோ முன் வர வேண்டுமென்பதே மலையக மக்கள் முன்னணியின் தெளிவான நிலைப்பாடாகும்."