* ஐ.தே.க. குற்றச்சாட்டு
எம்.ஏ.எம்.நிலாம்
காணாமல்போன முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான ஜயசுந்தர விஜேகோனை கண்டுபிடிப்பதில் பொலிஸார் அசிரத்தை காட்டுவதாக கண்டனம் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இச்செயல் அதிகாரத்தரப்பின் பின்னணியிலேயே இடம்பெறுவதாக சந்தேகிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
முன்னாள் வர்த்தக, நுகர்வோர் விவகார பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி மொனராகல மாவட்ட பிரதம அமைப்பாளருமான ஜயசுந்தர விஜேகோன் காணாமல்போனமை தொடர்பில் பொலிஸார் உட்பட பாதுகாப்புத் தரப்பு இதுவரையில் போதுமான தகவல்களை திரட்டுவதில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாகவே ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் கொள்கிறது.
தலைநகரிலும் சுற்றுப்புறங்களிலும் பொதுமக்கள் கடத்தப்படும் செயல் தற்போது முழு நாட்டிலும் வியாபித்திருப்பது பெரும் அச்சச் சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.
எனவே, விஜேகோன் காணாமல்போன விவகாரத்தில் பாரபட்சமற்ற நியாயமான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம். இதனை மேலும் தாமதப்படுத்தி அவரது உயிருக்கு ஆபத்து நேருமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டிவரும் எனவும் ஐ.தே.க. வலியுறுத்திக் கூறியுள்ளது.