* பிரதியமைச்சர் செல்லச்சாமி தெரிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனின் மறைவு தமிழ்ச் சமுதாயத்துக்கு பெரும் இழப்பாகுமென பிரதி தபால் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போஷகருமான எம்.எஸ்.செல்லச்சாமி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் மறைவுக்கு பிரதி அமைச்சர் செல்லச்சாமி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமை சகலராலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். அரசியலில் ஆர்வமாக பங்கெடுத்த இவர் ஆன்மீகத்துறையிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.
தொடர்ச்சியாக நடக்கும் படுகொலைகள் ஜனநாயகத்துக்கும் சமாதான நிலைப்பாட்டுக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்களாக அமைந்துள்ளன.
அத்துடன், நெருக்கடிமிக்க இக்காலகட்டத்தில் அவரின் மறைவு பெரும் கவலை தரும் விடயமாகவுள்ளது.
யாழ். மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகவும் இருந்த இவர் குறுகிய காலமே அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் வெளிஉலகிற்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பரப்பியவராவார்".