முகத்துவாரம் பகுதி குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலி தற்கொலைக் குண்டுதாரியான சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் தொடர்புடைய பதினொரு தொலைபேசிகளின் இலக்கங்களையும் முகத்துவாரம் பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரட்ன தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றபோது நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இச்சம்பவம் தொடர்பான தமது விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாகவும் பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர்.
இந்த விசாரணைகள் குறித்து முழு அறிக்கையையும் எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை மன்றில் சமர்ப்பிக்கும்படியும் நீதிவான் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இச்சம்பவத்தில் தற்கொலைக் குண்டுதாரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டனர் . இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் 5 பொதுமக்களும் காயமடைந்தனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி விடுதலைப் புலிகளின் குண்டு தயாரிக்கும் விஜயன் என்ற நபர் என்றும் இவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்றும் தாம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற மாடி வீட்டில் குண்டுதாரி 2 ஆவது மாடியில் தங்கியிருந்தார் எனவும் முதலாம் மாடியில் அந்த வீட்டின் உரிமையாளர் தங்கியிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.