திருகோணமலை மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மோதல்களில் பாதிக்கப்பட்ட சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் நிதி உதவி வழங்கும் நிகழ்வுகள் மூதூர், ஈச்சிலம்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில் வைத்து இன்று சனிக்கிழமையும் , திருகோணமலை மாவட்ட வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் அலுவலகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளன.
109 சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு மீண்டும் தங்களின் தொழில்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான பணம், உபகரணங்கள் இந்நிகழ்வுகளின் போது நன்கொடையாக கையளிக்கப்படவுள்ளது.
ஈச்சிலம்பற்று பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், கௌரவ அதிதியாக ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரனும் மூதூர் பிரதேச செயலகத்தில் பிற்பகல் 2 மணியளவில் நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.எச்.முகமது கனியும் பங்குபற்றுவர்.
திருகோணமலை மாவட்ட வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் அலுவலகத்தில் நாளை ஞாயிறு காலை நடைபெறும் நிகழ்வில் திருமலை பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் கௌரவ அதிதியாகக் கலந்து கொள்வார்.
ஈச்சிலம்பற்று, மூதூர், திருகோணமலை ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமந்தா அபேவிக்ரமாவும் சம்மேளனத்தின் விசேட திட்டப் பணிப்பாளர் ஸ்ராம்ப் ஸ்டெம்போ , திருமலை சம்மேளன நிர்வாகிகளும் பங்குபற்றுவர்.