* பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்
மாணவர்கள் கல்வியிலும் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமாக இருந்தால்தான் படிக்கலாம் எனத் தெரிவிக்கும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.கேதீஸ்வரன், பெற்றோர்கள் இதில் அக்கறையாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
வல்வெட்டித்துறை வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் அப்பகுதி மக்கள் நடத்திய மாணவர்கள் கௌரவிப்பு விழாவிலும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் கே.மயிலேறும் பெருமாள், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எம்.திருநாவுக்கரசு ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து பேசிய டாக்டர் கேதீஸ்வரன்; வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் 3 கோடி ரூபாவை வழங்கியுள்ளது.
வல்வெட்டித்துறை வைத்தியசாலை சமூகத்துடன் பின்னிப் பிணைந்து சிறந்த சமூகப் பணியாற்றும் நிறுவனமாகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறந்த வைத்தியசாலையாகவும் சிறப்பாகவும் செயற்பட்டு வருகிறது.
இந்த வைத்தியசாலையின் சிறந்த பணிக்கு மாவட்ட வைத்திய அதிகாரியின் ஆளுமையும் சேவைத் திறமையுமே காரணமாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 38 வைத்தியசாலைகளும் சிறப்பாக இயங்கி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையும் மருந்துகளின் தட்டுப்பாடுகளும் பாரிய பிரச்சினையாகவுள்ளன. இதுகுறித்து சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர்கள் யாழ்ப்பாண பிரதேசத்திலேயே பணியாற்றுவதற்கு பின்னடிக்கிறார்கள் என்ற பிரச்சினை எமக்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும், தென்னிலங்கையில் இருந்து 14 டாக்டர்கள் யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலைகளில் பணியாற்ற வந்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 117 டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், 23 டாக்டர்களே இங்கு பணியாற்றுகின்றனர்.
67 வயதுக்கு பின்னர் டாக்டர்களுக்கு மீள் நியமனம் வழங்கப்படாது என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், யாழ். மாவட்டத்தில் ஏழு, எட்டு வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலையும் ஏற்படும்.
இந்த நிலைமையில் வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு சர்வதேச நிறுவனங்களின் உதவிகள் இன்றியமையாததாகவுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச நிறுவனம் பருத்தித்துறை ஆஸ்பத்திரிக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன டிஜிற்றல் எக்ஸ்றே இயந்திரத்தை வழங்கியுள்ளது.
பண்ணை மார்பு நோய் சிகிச்சை நிலையத்துக்கு எக்ஸ்றே இயந்திரத்தை வழங்கியுள்ளது. அதுமட்டுமன்றி தீவுப்பகுதி வைத்தியசாலைக்கு 1 கோடி ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வைத்தியசாலைகளுக்கு அல்ற்ரா சவுண்ட் ஸ்கானர் ஒன்றை வழங்கினால் பேருதவியாக இருக்கும் என்றார்.
வல்வெட்டி வைத்தியசாலையின் நிறுவுனர் அமரர் கு.காந்தரம் அப்புக்குட்டியாபிள்ளையின் உருவச்சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
172 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.