கதிர்காமம் பிரதேசத்தில் தற்போது ஒரு புதுவித காய்ச்சலுடனான சளியும் குழந்தைகளுக்குப் பரவி வருவது குறித்து கதிர்காமம் ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் டாக்டர் சமல் சுபசிங்க எச்சரித்துள்ளார்.
இந்த நோயினால் பீடிக்கப்பட்ட கதிர்காமம், புதுநகரைச் சேர்ந்த ஒரு மாதக் குழந்தையும் , கதிர்காமம், விகாரை வீதியைச் சேர்ந்த 1 1/2 வயது குழந்தையும் புதன்கிழமை ஆஸ்பத்திரியில் காலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாலையில் மரணமடைந்துள்ளனர்.
இக்குழந்தைகளை பெற்றோர் ஆஸ்பத்திரியில் அனுமதித்த போது அக்குழந்தைகளுக்கு மூக்கினால் சளி வடிந்தபடியிருந்ததாகவும் காய்ச்சலும் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இக் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால், தற்போதைய காலநிலையில் குழந்தைகளின் பராமரிப்பில் கவனம் செலுத்துமாறும் அவர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இங்கு மரணமான குழந்தைகளின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல் காரணமாக சில குழந்தைகள் கதிர்காமம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.