கல்கிசையில் இடம்பெற்ற பஸ்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிங்களப் பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் கல்கிசை நீதிவான் ஹர்ஸா சேதுங்க பிணையில் செல்ல அனுமதித்தார்.
கந்தசாமி மதிரவன், வைரமுத்து கந்தசாமி, சிறிலால் சில்வா , சிந்தா தெதுனு ஆகிய நால்வருமே சந்தேக நபர்களாவர்.
சந்தேக நபர்களில் இரு தமிழர்களும் சம்பவ இடத்திற்கு அருகில் தொலைத்தொடர்பு நிலையத்தை நடத்தி வருகின்றனர்.
சிங்களப் பெண் அந்த தொலைத் தொடர்பு நிலையத்தின் ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கள இளைஞனான சந்தேகநபர் சம்பவத்தின்போது இந்த தொலைபேசி நிலையத்துக்கு வந்து கையடக்கத் தொலைபேசி அட்டையை மாற்றினார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை வியாழக்கிழமை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் .
இவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பிணையில் விடும்படி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.
சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க பொலிஸாரும் ஆட்சேபிக்காததால் நீதிவான் அவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தார்.
மேல் விசாரணை மே 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.