* மூவர் விடுவிப்பு; இருவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி.மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெலவிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மகேஸ்வரனின் கொலை தொடர்பான விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அறிக்கை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அமைச்சர் ரம்புக்வெலவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மகேஸ்வரன் கொலையுண்ட பின்னர் அமைச்சர் ரம்புக்வெல பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அநுர சேனநாயக்கா தெரிவித்தார்.
இதேநேரம், கைது செய்யப்பட்ட ஐவரில் மூவரை விடுவிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இருபெண்கள் உட்பட மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறும் பிரதான சந்தேக நபரையும் மற்றொரு சந்தேக நபரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மேலதிக நீதிபதி ரவீந்திர பிரேமரட்ன உத்தரவிட்டார்.
இதேவேளை, இக்கொலை தொடர்பான பொலிஸாரின் விசாரணையில் தாங்கள் திருப்தியடையவில்லையென குடும்பத்தவர்கள் தெரிவிப்பதாக, அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.