எம்.ஏ.எம்.நிலாம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் படுகொலையை கண்டித்திருக்கும் அரசாங்கம் இதுபோன்ற படுகொலைகளை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அநுரபிரியதர்ஷன யாப்பா மேற்கண்ட அரசின் கண்டனத்தை வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல்வாதிகளையும் படுகொலை செய்வதன் மூலம் தமது இலக்குகளை அடைய சில சக்திகள் முனைகின்றன. அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் எனது நெருக்கமான நண்பராவார். அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதையிட்டு நான் பெரும் கவலை கொண்டவனாக இருக்கின்றேன்.
இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலாகும். எனவே, இது குறித்து அரசு உடனடியாக எதனையும் தெரிவிக்க முடியாது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணை அறிக்கை வந்த பின்னரே அரசு படுகொலை குறித்து எதுவும் கூற முடியும் எனவும் அமைச்சர் யாப்பா மேலும் தெரிவித்தார்.