* இந்திய அணிக் கப்டன் கூறுகிறார்
ரசிகர்களின் பாராட்டும் ஆதரவும் அணியின் எதிர்கால வெற்றிகளுக்கு மேலும் வழிவகுக்குமென இந்திய அணிக் கப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோணத் தொடரில் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு வியாழக்கிழமை டில்லியில் பெரும் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவின் போது கப்டன் தோனி உணர்ச்சிவசமாக பேசினார். சர்ச்சை மிகுந்த அவுஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்கள் சாதித்துக் காட்டியதாக குறிப்பிட்டார். அங்கு தோனி பேசியதாவது;
வீரர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பாராட்டுகள் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும். வெற்றியில் சக வீரர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இவர்களால் தான் கிண்ணத்தை கைப்பற்ற முடிந்தது. அவுஸ்திரேலிய தொடரின் போது களத்திற்குள்ளே மற்றும் வெளியே நமது வீரர்கள் சிறப்பான நடத்தையை வெளிப்படுத்தினர்.
இங்கே ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாகமளித்து வரும் ரசிகர்களுக்கு எனது நன்றி. ரசிகர்களுக்கு தொடர்ந்து வெற்றி மகிழ்ச்சி தருவோம். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற இளம் இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதேநேரம், இளம் வீரர்களை தேர்வு செய்ததே வெற்றிக்கு காரணம் என்றார் இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சரத் பவார். விழாவில் பவார் பேசியதாவது;
அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கிண்ணத்தை வெல்வது மிகப் பெரும் சாதனை. இந்த அதிசயத்தை தோனி தலைமையிலான இந்திய அணி நிகழ்த்திக் காட்டியுள்ளது. இதற்காக வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கிரிக்கெட் சபையின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இளம் வீரர்கள் வருகையால் அணியின் பலம் அதிகரித்துள்ளது. கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வி சகஜம். இதனை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி பெற்றால் வாழ்த்துகிறார்கள். அதேநேரத்தில், தோல்வியடைந்தால் வசைபாடுகிறார்கள். இதனை தவிர்த்து தோல்வியிலும் வீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றார்.
`ருவென்ரி -20' உலகக் கிண்ணத்தை பெற்ற இந்திய அணிக்கு மும்பையில் நடந்த பாராட்டு விழாவின் போது, கிரிக்கெட் சபை நிர்வாகிகள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். வீரர்களை பின் வரிசையில் அமர வைத்ததால் சர்ச்சை எழுந்தது. இம்முறை டில்லி விழாவில் இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டது. ஒரு பக்கம் நிர்வாகிகள், மறுபக்கம் வீரர்கள் என அனைவரும் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.