அவுஸ்திரேலிய மண்ணில் முதல் முக்கோண கிரிக்கெட் சம்பியன் கிண்ணத்தை வென்ற இந்திய அணியினருக்கு டில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் வியாழக்கிழமை சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
மைதானத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்துக்கிடையே வீரர்கள் பாராட்டு மழையில் நனைந்தனர் . 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அரங்கில் கூடியிருந்தனர். பாராட்டு விழாவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்பாடு செய்திருந்தது.
வியாழக்கிழமை காலை மும்பை வந்த இந்திய அணியினர் மற்றொரு விமானம் மூலம் பிற்பகல் 2.05 மணிக்கு டில்லி வந்தனர். பின்னர் நட்சத்திர ஹோட்டலில் மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேர ஓய்வுக்குப்பின் அலங்கரிக்கப்பட்ட பஸ்ஸில் பெரோஸ்ஷா மைதானத்துக்கு வந்தனர். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களுக்கு விண்ணை அதிரும் வகையில் கோஷம் எழுப்பி வரவேற்புத் தெரிவித்தனர்.
மைதானத்தில் டில்லி துணைநிலை ஆளுநர் தேஜிந்தர் கன்னா, பி.சி.சி.ஐ. தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் அவர்களை வரவேற்றனர்.
வீரர்கள் ஒவ்வொருவரும் தலா 58 இலட்சம் ரூபாவுக்கான காசோலையும் பூச்செண்டும் கொடுக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். அணியின் இதர உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகையாக 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
இளைஞர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற டில்லி வீரர்கள் விராத் கோஹ்லி, பிரதீப் சங்வான் ஆகியோரும் விழாவில் பாராட்டப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் தலா 2.5 இலட்சம் ரூபா பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
முன்னதாக விமான நிலையத்தில் கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் சபை உறுப்பினர்களும் வீரர்களை வரவேற்பதற்காக வந்திருந்தனர். தேசியக் கொடி மற்றும் பதாதைகளுடன் காத்திருந்த ரசிகர்கள் வீரர்களைக் கண்டதும் உற்சாகம் பொங்க வரவேற்பளித்தனர்.
விமான நிலையத்திலிருந்து வீரர்கள் பஸ்ஸில் ஏறியதும் உடனடியாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வீரர்கள் மிகவும் களைப்பாக இருந்ததால் வழிநெடுக வரவேற்பளிக்காமல் மைதானத்தில் மட்டும் பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.