Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டம் மீண்டும் நெருக்கடிக்குள் இலங்கை
[09 - March - 2008] [Font Size - A - A - A]
* அடிபட்டுப் போன கொழும்பின் நியாயப்படுத்தல்கள்! 28 இல் வெளியாகும் அறிக்கை அதிர்ச்சியை தருமா?

பி.ஆர்.நாயகம்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக விவாதிக்கப்பட்டு இலங்கை அரசாங்கம் அங்கு நெருக்கடி ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் அதேவேளையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையும் இலங்கையில் தன்னுடைய பணிகளை முடித்துக் கொண்டு வெளியேறப்போவதாக சர்வதேச சுயாதீனக் குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்குப் பெரும் சங்கடமான நிலையைக் கொடுத்திருக்கின்றது. மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச ரீதியான கடப்பாடுகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதை இவை தெளிவாகப் புலப்படுத்தியிருக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஏழாவது கூட்டத் தொடர் இவ்வார ஆரம்பத்தில் ஜெனீவா நகரில் ஆரம்பமாகியிருக்கும் நிலையிலேயே மீண்டும் ஒருமுறை இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருக்கின்றது. இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் நடைபெறும் கூட்டத் தொடரின் இறுதியில் வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கை கண்டனத்துக்குள்ளாகுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி. அரசாங்கத்தைச் சங்கடமான நிலைக்குத் தள்ளும் முயற்சியில் மனித உரிமைகள் அமைப்புகள் காய்களை நகர்த்துகின்றன. அரசாங்கமும் தனது பலமான அணி ஒன்றை ஜெனீவாவுக்கு அனுப்பியிருக்கின்றது.

இருந்தபோதிலும் வழமைபோல இம்முறையும் இலங்கை அரசாங்கம் தற்காப்பு நிலையிலேயே இருக்கின்றது. சர்வதேச ரீதியாகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புகள் தம்முடைய அறிக்கைகள் மூலம் அரசாங்கத்தின் மீது தாக்குதலைத் தொடுக்க அதனைத் தடுத்தாட முடியாது இலங்கை அரசு தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்க்கும் எனக் கருதப்பட்ட ஒரு சூழ்நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆதாரபூர்வமான நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கையை சங்கடத்துக்குள்ளாக்கியது. இலங்கையில் மோசமடைந்துள்ள மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக விரிவாகத் தகவல்களை வெளியிட்டிருக்கின்ற இவ்வமைப்பு இலங்கை தொடர்பிலான தன்னுடைய நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ளுமாறு ஐ.நா. சபையை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்காக அவ்வமைப்பு வெளிப்படுத்தியிருக்கும் ஆதாரங்கள் அரசாங்கத்தைச் சங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது. பலவந்தமாகக் காணாமற்போதல் தொடர்பான செயற்குழுவின் 2007 ஆம் ஆண்டு அறிக்கையில் காணாமல்போதல் தொடர்பாக உலகிலேயே அதிக எண்ணிக்கையைக் கொண்ட நாடாக இலங்கை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இது தொடர்பான பல ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதனைவிட ஐ.நா. சபையின் சித்திரவதைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மான்பிரட் நொவெக் கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்து நேரில் கண்டறிந்த விடயங்களின் அடிப்படையில் தன்னுடைய அறிக்கை ஒன்றை இங்கு சமர்ப்பிக்கவிருக்கின்றார். இதனைவிட இலங்கைக்கு நேரில் விஜயத்தை மேற்கொண்ட மனித உரிமைகள் பணிப்பாளர் லூயிஸ் ஆர்பரின் கடுமையான அறிக்கை ஒன்றும் இங்கு வெளியிடப்படவிருக்கின்றது. இதற்குமேல் சுயாதீன ஆய்வாளர்கள் பலருடைய அறிக்கைகளும் இங்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் வலியுறுத்தப்படும் முக்கிய விடயமாக இருக்கப்போவது மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதற்கு இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கள அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதாகவே இருக்கும். ஏற்கனவே, பல சந்தர்ப்பங்களில் சர்வதேச அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டுவரும் இந்தக் கோரிக்கையை கொழும்பு திட்டவட்டமாக நிராகரித்து வருகின்றது. இது ஐ.நா. சபையின் தலையீட்டுக்கான முதலாவது படியாக இருக்கும் என்பதுதான் சிங்களப் பேரினவாத அமைப்புகளின் கருத்தாக இருக்கின்றது. குறிப்பாக ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்பன இதனைத்தான் தீவிரமாகக் கூறிவருகின்றன.

ஐ.நா.வின் தலையீடு என்பது தமிழர்களுக்குத் தனித் தமிழத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இருக்கும் எனவும் அவர்கள் சொல்கின்றார்கள். ஐ.நா.வின் தலையீடு சிறுபான்மையின மக்களைப் பொறுத்தவரையில் நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முயலும் என்ற அச்சம்தான் அவர்களின் இவ்வாறான பிரசாரங்களுக்குக் காரணமாகவுள்ளது. எனவே, இவ்வாறான ஒரு கோரிக்கையை சிங்களப் பேரினவாத சக்திகள் மூர்க்கமாக எதிர்க்கும் என்பது நிச்சயமாக எதிர்பார்க்கக்கூடியதுதான். இதனையும் மீறி ஐ.நா. சபையின் வருகைக்குப் பச்சைக்கொடி காட்டும் நிலைமையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் இல்லை. இருந்தபோதிலும் இதனை நிராகரிப்பதற்கு வலுவான காரணங்களையோ நியாயங்களையோ முன்வைக்கக்கூடிய நிலைமையில் அரசாங்கம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா. சபையின் கள அலுவலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணத்தை விளக்கினார். "மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஜனநாயக ரீதியான கட்டமைப்பு முறைகளைப் புறந்தள்ளிவிடக்கூடிய வெளிமட்டக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என விடப்படும் வலியுறுத்தல்களில் அரசாங்கம் நம்பிக்கை வைக்கவில்லை. மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் நாடுகளின் தேசிய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கின்றார்.

இந்த உரையின் மூலமாக அமைச்சர் தெரிவித்திருக்கும் தகவல் தெளிவானது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பு போன்ற விடயங்களில் ஐ.நா. சபையின் தலையீட்டை அரசாங்கம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை அவருடைய உரை தெளிவாகப் புலப்படுத்துகின்றது. இவ்வாறான தலையீட்டை ஏற்பது உள்நாட்டு அரசியலிலும் அரசாங்கத்துக்கு இனவாதிகளால் பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும். அந்த நெருக்கடியானது அரசாங்கத்தின் இருப்பைக்கூட கேள்விக்குறியாக்குவதாக அமையலாம். இந்த நிலையில்தான் ஐ.நா.வின் தலையீட்டை நிராகரிக்கும் அரசாங்கம் மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்காக உள்நாட்டில் உள்ள அமைப்புகளில் நம்பிக்கை வைக்குமாறும் அவற்றைப் பலப்படுத்துமாறும் கோருகின்றது.

இவ்வாறு தேசிய ரீதியாக உள்ள அமைப்புகள் எந்தளவுக்கு நம்பகத்தன்மையுடன் செயற்படுகின்றன என்ற கேள்வி இந்த இடத்தில் முக்கியமாக எழுகின்றது. தேசிய ரீதியாகவுள்ள அமைப்புகள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயற்படக் கூடியவையாக இருக்குமாயின் சர்வதேசத் தலையீடு தொடர்பிலான பேச்சே எழுந்திருக்காது என்பதை அமைச்சர் கவனத்திற்கொள்ள வேண்டும். தேசிய ரீதியாகவிருக்கும் அமைப்புகள் நம்பகத்தன்மையுடன் செயற்படவில்லை என்பதை இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள புகழ்பெற்ற நிபுணர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழுவின் அறிக்கையும் தமது பணிகளை நிறுத்திக் கொண்டு வெளியேறப்போவதாக அவர்கள் அறிவித்திருப்பதும் தெளிவாகப் புலப்படுத்தியிருக்கின்றது. உரியமுறையில் கலந்தாலோசித்தும் அடிப்படைக் காரணங்களுக்காகவுமே இந்த முடிவை எடுத்ததாக இக்குழு அறிவித்திருக்கின்றது.

இலங்கையில் கடந்த சுமார் மூன்று வருட காலப்பகுதியில் இடம்பெற்ற 16 மிகவும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டமை அனைவருக்கும் நினைவிருக்கலாம். குறிப்பாக திருமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை பிரான்ஸைத் தலைமையகமாகக் கொண்ட தொண்டர் நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் கொடூரமாகக் கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இந்தக்குழு அமைக்கப்பட்டது. இச்சம்பவங்களின் பின்னணியில் அரச படைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன எனவும் அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே இந்தக் குழு ஜனாதிபதியால் அமைக்கப்பட்டது.

அதாவது சர்வதேச சமூகத்தைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சிதான் அது. இக்குழுவின் விசாரணைகள் வினைத்திறனுடையதாக இருக்குமா என்ற கேள்வி சர்வதேச அரங்கிலேயே எழுப்பப்பட்டபோதுதான், அந்தக் குழுவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக இந்தியாவின் ஓய்வுபெற்ற நீதியரசர் பகவதி தலைமையில் "புகழ்பெற்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழு" அமைக்கப்பட்டது. இக்குழு ஏற்கனவே வெளியிட்ட தனது இடைக்கால அறிக்கையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றது. இப்போது ஜனாதிபதி ஆணைக்குழு எதனையும் செய்யப்போவதில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ள நிலையிலேயே தமது பணிகளை முடித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுவதென்ற முடிவை இக்குழு எடுத்திருக்கின்றது.

அதாவது தேசிய ரீதியான அமைப்புகளின் மூலமாக மனித உரிமைகள் பிரச்சினையைக் கையாள முடியும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெரிவித்திருப்பதை சர்வதேச நிபுணர்கள் குழுவின் முடிவு பொய்யாக்கிவிட்டது. ஜெனீவா மாநாடு ஆரம்பமாகி இலங்கை அமைச்சரின் உரையும் இடம்பெற்ற பின்னணியில் சர்வதேச நிபுணர்கள் குழு எடுத்துள்ள இந்த முடிவும் அது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையும் இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு அமைப்புகளில் நம்பிக்கை வைக்க முடியாது என்ற கருத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே இக்குழுவின் விலகல் அமைந்திருக்கின்றது.

Email this page Your Opinion Print this page
விதுரன்
அஜாதசத்ரு
நம்முள்
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டம் மீண்டும் நெருக்கடிக்குள் இலங்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com