Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
நம்முள்
[09 - March - 2008] [Font Size - A - A - A]
ஆட்சி மாற்றம்

விடுதலைப் புலிகளின் ஒரு பக்க யுத்த நிறுத்தம் சம்பந்தமாக என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு தெரியவில்லை. வடக்குக் கிழக்கு தமிழர்களின் மக்கள் அனுசரணை இல்லா வன்முறையில் வாஞ்சை காட்டும் ஒரு சிறு குழுவே இந்தப் புலிகள் என்றும் அவர்களால்த்தான் நாட்டில் சமாதானம் ஏற்படாது இருந்து வருகிறது என்றும் உலகுக்கு எடுத்துக்காட்டி வந்த இலங்கை அரசாங்கத்திற்கு இது பேரிடியாக அமைந்தது. தாமும் சமாதானத்தில் நாட்டங்கொண்டவர்கள் என்பதை சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் எடுத்துக்காட்டாவிட்டால் தமது உண்மைச் சொரூபம் சர்வதேச அரசாங்கங்களுக்குத் தெரியவந்து விடுமோ என்ற மனக்கிலேசத்தில் சுமார் 24 மணித்தியாலங்களைக் கழித்தார்கள். அதன் பின் முறையாக உத்தியோகபூர்வமாக எல்.டி.டி.ஈ.யினர் எமக்கு அறிவித்தால் அவர்களின் யுத்த நிறுத்த விளம்பலை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் கூறினார். இங்கிலாந்தில் அப்போதிருந்த சந்திரிகா விடுதலைப் புலிகளின் இந்த ஒரு பட்ச அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். அதற்குப் பல காரணங்கள் இருந்தன.

ஒன்று யுத்த தளபாடங்கள் வாங்குவதற்காகப் பல கோடி ரூபாய்களை அரசாங்கம் செலவிட்டிருந்தது. இரண்டு யுத்தம் இனி நடந்து எமக்குச் சார்பாக முடியும் என்ற விதத்தில் யுத்தத்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன் நாட்டை ஆயத்தப்படுத்தியிருந்தது அரசாங்கம். மூன்று வாழ்க்கைச் செலவு கூடியதற்குக் காரணம் போர் என்று கூறி விலைவாசிகளின் ஏற்றத்தை நாட்டுக்காக ஏற்கவேண்டும் என்று மக்களிடம் கோரியிருந்தது அரசாங்கம். நான்கு யாழ். பிரதேசத்தைப் புலிகளிடம் இருந்து பறித்துக்கொள்ள இராணுவத் திட்டங்கள் பல போடப்பட்டிருந்தன. ஐந்து இஸ்ரேலிடம் இருந்து போர் விமான ஓட்டிகள் கூட தருவித்தாகிவிட்டது. இந்த நேரத்தில் போய் சமாதானத்தில் ஈடுபட்டால் அவ்வளவு பிரயாசப்பட்டுத் தாம் தீட்டிய திட்டங்கள் எல்லாம் வீணாகிவிடும் என்று கருதியது அரசாங்கம். போர் வீரர்கள் மனோதிடத்தை இழந்து விடுவார்கள் என்று அச்சப்பட்டது அரசாங்கம். எனவே, போர் தொடரும் என்ற நிலையில் அரசாங்கம் நடவடிக்கைகளை நடத்தியது.

2001 ஆம் ஆண்டிலும் போர் நீடிக்கும் என்ற விதத்தில்த்தான் புத்தாண்டு பிறந்தது.

போர் நிறுத்தமானது ஒரு மாதத்திற்கு விடுதலைப் புலிகளால் அமுல்படுத்தப்பட்டும் அரசாங்கம் அதனை ஏற்கவில்லை. 2001 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி ஆனையிறவைத் திரும்பக் கைப்பற்ற அரச படைகள் முனைந்தன. ஆனால், அது அழிவிலும் தோல்வியிலும் முடிந்தது.

மீண்டும் விடுதலைப் புலிகள் ஒருபக்க யுத்த நிறுத்தத்தைக் கைப்பிடிப்பதாக அறிவித்தனர். பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாக முன் போர் நிறுத்தத்துக்கு இடமில்லை என்றார் சந்திரிகா.

இத்தருணத்தில் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்த தமிழ் மக்களின் உதவியை விடுதலைப் புலிகள் பெறாதிருக்கப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பிரித்தானிய அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கெதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்யாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான சுமூக உறவு மிக மோசமாகப் பாதிப்படையும் என்று எச்சரித்தார். இந்த எச்சரிக்கை காரணமாக உலகின் பயங்கரவாத இயக்கங்களுள் ஒன்றாக விடுதலைப் புலிகளைப் பிரித்தானியா அடையாளம் காட்டியது. அவர்கள் பெயர் இடம்பெற்ற பயங்கரவாத இயக்கப்பட்டியலில் மற்றைய பயங்கரவாத இயக்கங்கள் பல இஸ்லாமிய அடிப்படைவாதிகளே. பிரித்தானியா தான் கேட்டுக் கொண்டதை ஏற்று நடந்ததால் கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளையும் அதேபோல் செய்யுமாறு இலங்கை கோரியது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் அதற்கு அப்போது செவி சாய்க்கவில்லை. எனினும், இலண்டனில் இருந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகம் வன்னிக்கு இடம் மாற்றப்பட்டது.

விடுதலைப் புலிகள் நான்காவது மாதத்திற்கும் தமது போர் நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். அரசாங்கத்திற்குப் பெருவாரியான போர் ஆயுதங்கள் வந்து சேரப்போகின்ற தருணம் பார்த்து தமிழ், சிங்கள புது வருடப் பிறப்பின்போது ஐந்து நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தது அரசாங்கம்.

அந்த ஐந்து நாட்கள் முடிவில் ஏப்ரில் 23 ஆம் திகதியளவில் விடுதலைப் புலிகள் தமது போர் நிறுத்த பிரகடனத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். மீண்டும் ஆனையிறவை அடைய அரச படையினர் பிரயத்தனங்கள் மேற்கொண்டும் அவை பயனளிக்கவில்லை.

1983 ஆந் திகதிய தமிழர்க்கெதிரான கறுப்பு ஜூலை கலவரங்களின் 18 ஆவது ஆண்டுப் பூர்த்தியின் நினைவாக 2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதியன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் அண்மித்த வான்படை அடித்தளத்திலும் தாக்குதல் ஒன்றை நடத்தினர் விடுதலைப் புலிகள். சுமார் பதின்மூன்று வானூர்திகளைப் பறிகொடுத்தது அரசாங்கம். நட்டம் சுமார் ஐந்நூறு மில்லியன் டாலர்கள் எனக் கணக்கெடுக்கப்பட்டது. உடனே அன்று மத்தியானம் யாழ். குடாநாட்டின் மீது அரச வான் படைகள் குண்டுகளைப் பொழிந்தன. கேட்டால் விடுதலைப் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இருப்பிடங்களையே குண்டு வைத்துத் தகர்த்ததாகக் கூறினர்.

சந்திரிகாவின் கட்சியினர் சிலர் எதிர்க் கட்சிக்குத் தாவியதால் ஒக்டோபர் 10 ஆம் திகதியன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டு டிசம்பர் 5 ஆம் திகதிக்கு மீண்டும் தேர்தல் நியமிக்கப்பட்டது. பல வன்செயல்களின் மத்தியில் தேர்தல் டிசம்பர் 5 ஆம் திகதி நடந்து முடிந்தது. ஆனால், சுமார் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கிழக்கில் வாக்களிக்க இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சுமார் ஏழு ஆதரவாளர்கள் நாடுபூராகவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அரச கட்சி ஆதரவாளர்களே இதைச் செய்தார்கள் என்று ரொயிடர்ஸ் செய்தித் தாபனம் அறிவித்தது.

புதிய தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமை முன்னணியான ஐக்கிய தேசிய முன்னணியினர் 225 பாராளுமன்றத் தேர்தல் ஆசனங்களில் 129 ஐக் கைப்பற்றினர். விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியானார். ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் சட்டவாக்க அதிகாரமும் (Legislative Power) நிறைவேற்று அதிகாரமும் (Executive Power)வெவ்வேறு கட்சி நபர்கள் வசம் இருந்ததால் விட்டுக்கொடுத்து அரசாங்கத்தை நடத்த வேண்டிய கடப்பாடு இருவரையுஞ் சார்ந்தது. வடக்கு, கிழக்கில் தமிழர் தேசியக் கூட்டணி மொத்தமாக (தேசியப் பட்டியல் உள்ளடங்க) 24 ஆசனங்களைப் பெற்றது.

புதிய அரசாங்கம் வந்தவுடன் மீண்டும் டிசம்பர் 24 ஆம் திகதி தொடக்கம் ஒரு பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.

2002 தொடங்கும் போது நிலைமை முற்றிலும் மாற்றமடைந்திருந்தது. புதிய அரசாங்கம் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட யுத்த நிறுத்தத்தைத் தாமும் ஏற்றுப் போரை நிறுத்திக்கொண்டது.

அடுத்தவை அடுத்த வாரம்.

Email this page Your Opinion Print this page
விதுரன்
அஜாதசத்ரு
நம்முள்
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டம் மீண்டும் நெருக்கடிக்குள் இலங்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com