3 ஆவது எம்.பி.யையும் இழந்துள்ள கூட்டமைப்பு
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனுடன் இதுவரை மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பழி வாங்கலுக்குள் உள்ளடக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுவிட்டு தனது இருப்பிடமான வன்னியிலுள்ள வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவரது வாகன சாரதியான பெரியண்ணன் மகேஸ்வரராஜா ஆகியோர் வீதியோரத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு விட்டு வியாழக்கிழமை வன்னியிலுள்ள இருப்பிடம் செல்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்புடன் ஓமந்தை வரை சென்று அங்கிருந்து சாரதியும் இவரும் தனியாகவே பயணம் செய்துள்ளனர்.
இவ்வேளையிலேயே ஓமந்தை சோதனைச்சாவடிக்கு அப்பால் ஏ-9 வீதியிலுள்ள கனகராயன்குளம், மன்னகுளம் சந்திக்கு அருகில் கொல்லர்குளம் பகுதியில் வியாழக்கிழமை நண்பகல் 1.50 மணியளவில் வீதியோரம் வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த கிளைமோர் தாக்குதலிலேயே சிவநேசன் எம்.பி.யும் அவரது வாகன சாரதியும் உயிரிழந்துள்ளனர்.
வன்னிப் போக்குவரத்துக்கான முதலாவது தடுப்புப் பாதையான மதவாச்சியில் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அங்கிருந்து வவுனியாவிலுள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் இரண்டாவது தடவையாக சோதனைக்குள்ளாக்கப்பட்டு ஏ-9 வீதியூடாகப் பயணித்த வேளையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக வன்னியிலிருந்து கொழும்பு வரும் வழியில் ஓமந்தை மற்றும் மதவாச்சி சோதனைச் சாவடிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் வகையில் பொலிஸாரும் படையினரும் நடந்து கொண்டதாக இறுதியாக நடைபெற்ற சபை அமர்வுகளில் சிவநேசன் எம்.பி. முறையிட்டிருந்த நிலையிலேயே கிளைமோர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதனைவிட கடந்த ஒரு மாதகாலத்திற்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கே.சிவநேசன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கனகரட்ணம் ஆகியோர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக கொழும்பு செல்வதற்காக வந்த வேளையில் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு படையினரால் திருப்பியனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கில் மிகக் கூடுதலான மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அண்மைய காலங்களில் பல்வேறு அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதிலும், அதற்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இதுவரை காலமும் மேற்கொள்ளப்படவில்லை என்றே பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு நகரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் கிறிஸ்மஸ் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட இடம் படைமுகாம்களையும் சோதனைச் சாவடிகளையும் உள்ளடக்கியதாக அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமாகும். ஆனால், கொலையாளிகள் மிகச் சாதாரணமாகவே தப்பிச் சென்று விட்டனர்.
ேஜாசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்குமிடையே நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது முறையிடப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் இன்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதனையடுத்து, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் தலைநகர் கொழும்பிலுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள படைமுகாம் ஒன்றுக்கு அண்மையாகவுள்ள பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
ஜோசப் பரராஜசிங்கம் , நடராஜா ரவிராஜ் ஆகியோரது படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசதரப்பால் அறிவிக்கப்பட்ட போதிலும், கொலையாளிகள் கைது செய்யப்படவுமில்லை சட்டத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை.
இதனைவிட இப்புதுருடம் முதல்நாளன்று தமிழ் மக்களின் வாழ்வில் மரண பயத்தை ஏற்படுத்திய நிகழ்வாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் படுகொலை செய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற உத்தரவின்படி அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்ட நிலையில், சாட்சிகளாகச் சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் அதுதொடர்பான விசாரணைகளும் இழுபட்டுக் கொண்டு செல்வதையே காணக்கூடியதாகவுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன் ஏ-9 வீதியில் வைத்து கிளைமோர் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டுமென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அரசாங்கமும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக யாழ் குடாநாட்டு மக்களின் அவலநிலையை, துயரவாழ்க்கையை உளப்பூர்வமாக துணிச்சலுடன் வெளிக் கொண்டு வந்த நீண்டகால தொழிற்சங்கவாதியான ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்து போய் நிற்கிறது.
வடக்கு, கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்ச்சியாக இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் படுகொலைச் சம்பவங்கள், அச்சுறுத்தல்கள், விசாரணைகள் என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகமும் தயங்கிக் கொண்டிருப்பதேன்?