மடுவை இலக்கு வைக்கும் படையினர்
* மணலாறு, வவுனியா களமுனைகளில் படையினரின் தடுமாற்றம்
வன்னியில் கடும் சமர் தொடர்கிறது. வன்னிக்குள் சிறுகச் சிறுக முன்னேறி பெருமளவு நிலப் பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் அரசு பல்வேறு களமுனைகளிலும் பாரிய படை நடவடிக்கைக்கு முனைகிறது. பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்ற போதும் மிக முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றி படையினர் வெற்றிகரமாகவே வன்னியில் படைநடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் காண்பிக்க வேண்டிய தேவை அரசுக்குள்ளது.
தற்போது வன்னிப் போர்க்களத்தில் மணலாறு, மன்னார், வவுனியா என பல களங்களைத் திறந்துள்ள படையினர் ஒரே நேரத்தில் அனைத்து முனைகளிலும் முன்நகர முற்படுகின்றனர். வன்னிக்குள் எல்லா முனைகளிலும் ஒரேநேரத்தில் நுழைவதன் மூலம் விடுதலைப்புலிகளை திகைப்பிலாழ்த்த படையினர் முனைகின்றனர். ஆனாலும், படையினர் எதிர்பார்த்தது போல் களமுனையில்லையென்பது தற்போது நன்கு தெளிவாகிறது.
வன்னியில் இடம்பெறும் பாரிய படை நடவடிக்கைக்குச் சமாந்தரமாக பாரிய பிரசார நடவடிக்கையிலும் அரசும் படைத்தரப்பும் இறங்கியுள்ளன. தினமும் படையினர் வன்னியின் சகல முனைகளிலும் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றுவது போன்றும் ஓரிரு படையினர் மட்டுமே கொல்லப்படுகையில் புலிகள் தரப்பில் முப்பது, நாற்பது பேர் கொல்லப்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தெற்கில் இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதுடன், யுத்தத்திற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெறவும் அரசு முற்படுகிறது.
வன்னியில் படையினர் திறந்துள்ள அனைத்து களமுனைகளிலும் டாங்கிப் படையணி முதற்கொண்டு ஆட்லறி படையணி வரை சகல படையணிகளையும் நிறுத்தி ஆயிரக்கணக்கில் படையினரைக் குவித்து தினமும் கடும் சமர் நடைபெற்று வருகிறது. ஆனாலும், எந்தக் களமுனையிலும் எதிர்பார்த்த வெற்றி கிட்டுவதாகத் தெரியவில்லை. குறிப்பிட்டதொரு பகுதிக்குள் நுழைவதற்குள் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. எந்தக் களமுனை வாய்ப்பாயிருக்கிறதென்பதை தேர்ந்தெடுப்பதில் படையினருக்கு நீண்ட நாட்கள் தடுமாற்றமிருந்தது.
தற்போது, வன்னியின் கிழக்கே கொக்குத்தொடுவாய் முதல் வன்னியின் மேற்கே மன்னார் திருக்கேதீஸ்வரம் வரையான, இரு பக்கமும் கடல்களுடன் கூடிய முழுமையான போர் அரங்கைத் திறந்து நாள்தோறும் கடும் சமரை நடத்தி புலிகளை மெதுமெதுவாகப் பலவீனப்படுத்தி வன்னிக்குள் புகுந்துவிடலாமென்று படையினர் கருதுகின்றனர். கடந்த ஒரு வருடமாக இந்த நினைப்புகளுடனேயே வன்னியில் படை நடவடிக்கை தொடர்கிறது.
வடக்கே யாழ். குடாவிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை உடைத்துக் கொண்டு முன்னேற மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் புலிகள் முறியடித்துள்ளனர். யாழ்.குடாவில் கிளாலி - முகமாலை - நாகர்கோவிலென ஒரே அச்சிலிருக்கும் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளைத் தகர்த்தழித்து முன்னேறிவிட படையினர் இன்று வரை பல்வேறு தடவைகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அங்கு எதுவுமே பலனளிக்கவில்லை. இதனால், தற்போது அங்கு தற்காப்புச் சமரையே படையினர் பிரதானமாக மேற்கொள்கின்றனர்.
கிளாலி முதல் நாகர்கோவில் வரையான 20 கிலோமீற்றர் அச்சில் இரு தரப்பும் தங்கள் முன்னரங்க காவல் நிலைகளை மிகச் செறிவாகவும் மிக வலுவாகவும் அமைத்துள்ளன. இதனால், ஒரு தரப்பு மற்றைய தரப்பின் முன்னரங்க காவல் நிலைகளை தகர்த்து, அழித்து முன்னேற முடியாத நிலையுள்ளது. மிகவும் குறுகலான இந்தப் பிரதேசம் இருதரப்புக்கும் தற்காப்புச் சமருக்கு சாதகமாகவேயுள்ளது. இங்கு, இராணுவத்தின் 55 ஆவது படையணியின் மூன்று பிரிவுகள் முன்னரங்க காவல் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. 55 ஆவது படையணியின் நான்காவது பிரிவு, முன்னரங்க நிலைகளுக்குப் பின்னால் நிற்கிறது.
இதைவிட 53 ஆவது தாக்குதல் படையணி, கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து சுமார் 6 மைல் தூரத்தில் பின்புறத்தே கொடிகாமம் மற்றும் மிருசுவில் பகுதியில் நிலைகொண்டுள்ளது. புலிகள் கிளாலி, முகமாலை முன்னரங்க நிலைகளைத் தகர்த்து முன்னேறினால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக எழுதுமட்டுவாள் பகுதியில் மிகவும் பலம்வாய்ந்த முன்னரங்க பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு அவை வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இதேநேரம், கிளாலி மற்றும் முகமாலை பகுதியிலும் வடமராட்சி கிழக்கே நாகர்கோவில் பகுதியிலும் தங்கள் முன்னரங்க நிலைகளை மிகவும் வலுவாக அமைத்துள்ள புலிகள், படையினர் மேற்கொண்ட அனைத்து முன்நகர்வு முயற்சிகளையும் முறியடித்து படையினரை அந்தந்தப் பகுதிகளிலேயே தொடர்ந்தும் முடக்கி வைத்துள்ளனர். இதனால், வன்னிக்கு வடக்கேயிருந்து வன்னிக்குள் நுழையும் படையினரின் முயற்சிகள் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதனாலேயே வன்னியின் தெற்கு முனைகளிலிருந்து வடக்கு நோக்கிய பாரிய படைநகர்வு முயற்சிகளில் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தினமும் படையினர் தாக்குதல் சமர்களை நடத்துவதன் மூலம் புலிகளை தற்காப்பு நிலையில் வைத்திருக்கின்றனர். தாக்குதல் சமரை புலிகள் தொடுக்காதவாறு புலிகளின் முன்னரங்க நிலைகள் மீதும் அதற்குப் பின்புறமும் தினமும் தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதல்களையும் மோட்டார் தாக்குதல்களையும் படையினர் நடத்தி வருகின்றனர்.
வன்னிக் களமுனையை பொறுத்தவரை அங்கு தற்போது திறக்கப்பட்டுள்ள அனைத்துக் களமுனைகளிலும் படையினர் தினமும் கடும் தாக்குதல்களை நடத்த வேண்டிய கட்டாய நிலைமையுள்ளது. புலிகளுக்கெதிரான தாக்குதல் சமர் வெற்றியளிக்கிறதோ இல்லையோ இங்கு புலிகள் தாக்குதல் சமரை தொடுக்காதவாறு அவர்களைத் தொடர்ச்சியாக தற்காப்பு நிலைகளில் வைத்திருப்பதன் மூலம் வன்னிப் போர்முனையில் தோல்விகளையும் பாரிய பின்னடைவு களையும் தடுக்க முடியுமென படைத்தரப்பு கருதுகின்றது.
1990 களின் பிற்பகுதியில் வன்னிக்குள் படையினர் மேற்கொண்ட `ஜெயசிக்குரு' படைநடவடிக்கை இதற்கு நல்லதொரு உதாரணமாகும். சுமார் 18 மாதகாலம் இங்கு படையினர் மேற்கொண்டிருந்த பாரிய படைநகர்வுகளை புலிகள் மூன்றரை நாட்களுக்குள் முறியடித்து உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். வவுனியாவிலிருந்து மாங்குளம் சந்திவரை முன்னேறியிருந்த படையினரை மூன்றரை நாட்களுக்குள் மாங்குளத்திலிருந்து ஓமந்தை வரை கொண்டுவந்து விட்டனர்.
2000 ஆம் ஆண்டளவில் யாழ்.குடாநாட்டுக்குள் நுழைந்த புலிகள் எந்நேரத்திலும் யாழ்நகரைக் கைப்பற்றி விடுவார்களென்ற நிலையிருந்தது போல், `ஜெயசிக்குரு' படை நடவடிக்கையை முறியடித்த புலிகள் ஓமந்தையைத் தாண்டி வவுனியாவுக்குள் நுழைந்து விடுவார்களென்ற நிலையிருந்தது. அந்தளவிற்கு புலிகளின் தாக்குதல் சமர் இருக்குமென்பதை படையினர் நன்கறிவர். இதனால், வன்னிக்குள் தற்போது தாக்குதல் சமரை நடத்திவரும் படையினர், புலிகளை தாக்குதல் சமர் நடத்துமளவிற்கு இடமளித்துவிடக்கூடாதென்பதில் மிகவும் கவனமாயிருக்கின்றனர்.
ஜெயசிக்குரு படை நடவடிக்கையை விட தற்போது வன்னியில் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கை சற்று வித்தியாசமானது. `ஏ9' வீதியை மையமாக வைத்து அந்தப் பாதை வழியே வன்னியை இரண்டாக ஊடறுத்துப் பிளந்து புலிகளின் மரபுவழிப் போர் ஆற்றலை சிதைத்து புலிகளின் போராட்டத்தளத்தை இரண்டாக உடைத்துச் சிதைத்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றலாமென படையினர் அப்போது 30 கிலோ மீற்றர் தூரத்திற்கு (மாங்குளம் வரை) சமர்க் களத்தை திறந்திருந்தனர். ஆனால், அதன் புலிகளின் `ஓயாத அலைகள்' நடவடிக்கை மூலம் படையினர் உணர்ந்து கொண்டனர்.
தற்போதைய நிலையில் வன்னிப் போர்க்களத்தில் மணலாறு மற்றும் வவுனியா போர்முனைகள் படையினருக்கு சாதகமாயிருப்பது போல் தென்படவில்லை. இவ்விரு போர்முனைகளும் அடர்ந்த காடுகளைக் கொண்டதால் இது தாக்குதல் சமரை நடத்துபவர்களை விட தற்காப்புச் சமரில் ஈடுபடுபவர்களுக்கே மிகவும் வாய்ப்பாக உள்ளது. கடந்த ஒரு வருடகாலத்தில் படையினர் இதனை நன்குணர்ந்திருக்கின்றனர். இவ்விரு களமுனைகளிலும் தற்போது பாரிய படை நடவடிக்கைகளை நிறுத்தியுள்ள போதும் புலிகள் இங்கு தாக்குதல் சமரைத் தொடங்கிவிடலாமென்ற அச்சத்தில் தினமும் இங்கு புலிகளைப் படையினர் தற்காப்பு நிலையிலேயே வைத்துள்ளனர்.
இந்த நிலையில்தான் மன்னார் களமுனையானது வன்னிக்குள் புகக் கூடியதொரு களமுனையாக படையினர் கருதுகின்றனர். திறந்த வெளிகளைக் கொண்ட மன்னார் களமுனையூடாக வன்னிக்குள் நுழைய படைத்தரப்பு முயல்கிறது. `ஜெயசிக்குரு' படை நடவடிக்கைக்கு முன்பாக மன்னார் ஊடாக `எடிபல' படை நடவடிக்கை இடம்பெற்றது. ஆனால், புலிகள் இதற்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. தந்திரமாக பின்நகர்ந்தனர். இதையடுத்து எதுவித எதிர்ப்புமின்றி படையினர் முன்நகர்ந்தனர்.
இதனை தங்களுக்குச் சாதகமாகக் கருதி தற்போது மன்னாரில் படையினர் முன்நகர்வு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பெரிதும் பொட்டல் வெளிகளைக் கொண்ட இந்தப் பிரதேசத்தில், மிகப்பெரும் படைபலத்துடனும் ஆயுத வளத்துடனும் முன்னேறும் படையினரை எதிர்கொண்டு அவர்களின் முன்னேற்ற முயற்சியை முறியடிப்பதென்பது சாதகமற்றது. அதிக இழப்புக்களை ஏற்படுத்தக்கூடியது. இதனால், மன்னார் களமுனையில் படையினரால் சில பிரதேசங்களுக்குள் முன்நகரக் கூடிய வாய்ப்புள்ளது.
பெரும் படையணியையும் ஆயுத வளத்தையும் கொண்ட இராணுவத்தினருக்கு இந்தக் களமுனை சாதகமாயுள்ள போதிலும் அவர்கள் பலத்த இழப்புக்களைச் சந்தித்து வருவது, அங்கு அவர்கள், தங்களுக்குச் சாதகமற்ற போர்முனைக்குள் செல்லும் போது எந்தளவுக்கு இழப்புக்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்குமென்பதை தெளிவாக்குகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 800 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துமுள்ளதாக படைத்தரப்பே கூறியுள்ளது. தற்போதைய நிலையில் இது இரு பற்றாலியன் படையாகும். சாதகமானதொரு முனையில், அதுவும் பெரும்பாலும் 58 ஆவது படையணியே இவ்வாறான இழப்புக்களை சந்தித்திருப்பதன் மூலம் தாக்குதல் படையணிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவது தெளிவாகிறது.
வன்னிக் களமுனையை பொறுத்தவரை மணலாறும் வவுனியாவும் படையினருக்கு பின்னடைவுகள் ஏற்படும் களமுனையென்பதாலும் கடந்த பல மாதங்களாக வன்னிக் களமுனையில் படையினர் குறிப்பிடத்தக்க வெற்றிகள் எதனையும் பெறவில்லை என்பதாலும், தங்கள் வெற்றி பற்றி பெரிதும் பேசப்படக் கூடியதொரு பிரதேசத்தை கைப்பற்றி அதன் மூலம் வன்னிக் களமுனையில் ஏற்பட்ட பின்னடைவுகளை சரிசெய்துவிட அரசு முனைகிறது. இதனால் மடுப்பகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்று படையினர் மிகவும் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
மடுவைக் கைப்பற்றுவது கூட படையினருக்கு சாத்தியமாகலாம். அரசியல் வெற்றிக்காக பாரிய இழப்புடன் ஒரு இராணுவ வெற்றியை பெற்றுவிட அரசு முனைவது தெரிகிறது. இந்த நடவடிக்கை மூலம் மடு தேவாலயத்தை மீட்டுவிட முடியும். ஆனால், அதற்குரிய கால நீடிப்பும் இழப்புகளும் எந்தளவிற்கு ஏற்படுமெனக் கூறமுடியாது. ஜெயசிக்குரு படை நடவடிக்கை போன்று இதுவும் பின்னர் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்கலாம். இதனைத் தக்கவைக்க சாதாரண படையணிகளையே பயன்படுத்த வேண்டிய நிலையேற்படலாம் என்பதால் பின்னர் இதனைத் தக்கவைப்பதிலும் படையினருக்கு நெருக்கடிகளேற்படலாம்.
தற்போதைய நிலையில் மன்னாரில் 58 ஆவது படையணியே தாக்குதல் சமரில் ஈடுபடுகிறது. 2006 இல் திருகோணமலை மாவிலாறு பகுதியில் தொடங்கி மட்டக்களப்பு தற்போது வன்னியென எல்லாப் பகுதியிலும் 58 ஆவது படையணியே முன்நகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது இப்படையணி எந்தளவிற்கு களைத்துச் சலித்துப் போயிருக்குமென்பதை தெளிவுபடுத்துகிறது. மன்னாரிலேயே தற்போது பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு கடும் சமரில் இறங்கியுள்ளதால் இது ஏனைய பகுதிகளையும் பெரிதும் பாதிக்கும். இதனால், படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தக்கவைப்பதில் பெரும் நெருக்கடிகள் ஏற்படலாம்.
இதேநேரம், முன்னைய காலச் சமர்களின் போதெல்லாம் ஒவ்வொரு சிறு படை நடவடிக்கைக்குக் கூட பெயர் சூட்டிய படையினர் தற்போது எந்தவொரு படை நடவடிக்கைக்கும் பெயர் சூட்டுவதில்லை. வன்னியில் நீண்டகாலமாக பாரிய படை நடவடிக்கை நடைபெற்று வருகின்ற போதும் அதற்கும் பெயர் சூட்டப்படவில்லை. இந்தப் படை நடவடிக்கைகளில் வெற்றி குறித்த நம்பிக்கை இல்லாததே இவற்றுக்கு பெயர் சூட்ட அரசு விரும்பாததற்கு காரணமாயிருக்கலாம்.
வன்னியில் இடம்பெறும் பாரிய படை நடவடிக்கைகளுக்கு எதிராக புலிகள் இன்னமும் பாரிய பாய்ச்சல்களை நடத்தவில்லை. புலிகளின் பாய்ச்சலுக்கு இடமளிக்காதும் அவர்கள் பாரிய பாய்ச்சலை நடத்துவதற்காக ஒன்றுகூட விடாதும் தாக்குதல்களைத் தொடுத்துவரும் படைய