Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
சிவநேசன்
[09 - March - 2008] [Font Size - A - A - A]
தலைநகரில் ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலையுடன் தான் இவ்வருடமே ஆரம்பமானது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தியாகராஜா மகேஸ்வரன் பிரபல்யமிக்க இந்து ஆலயமொன்றிற்குள் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த வருடத்தில் நாடும் மக்களும் சந்திக்கப் போகின்ற அனர்த்தமிகு நிகழ்வுப் போக்குகளுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றதோ என்று கலக்கமடைய வேண்டியிருக்கிறது என்று அவ்வேளையில் நாம் எமது ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததை ஒருகணம் திரும்பிப் பார்க்கின்றோம். இரண்டரை மாதங்கள் கூடக் கடந்து விடவில்லை. இன்னொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு விட்டு கொழும்பில் இருந்து வடபகுதிக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கே. சிவநேசன் (வயது 51) வன்னிப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத்தாக்குதலில் பரிதாபமாகப் பலியானார்.

சிவநேசனின் படுகொலையுடன் சேர்த்து 2004 பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து தமிழ் மக்களினால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் கொலையுண்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்திருக்கிறது. 2005 நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்குள் வைத்து நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 2006 நவம்பரில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நடராஜா ரவிராஜ் கொழும்பு நாரேஹேன்பிட்டியில் கடுமையான பாதுகாப்புடன் கூடிய பகுதியில் பட்டப் பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைகள் சகலதுமே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் நோக்குகின்ற முன்னென்றுமில்லாத படுமோசமான ஆபத்துக்களை உலகிற்கு அம்பலப்படுத்தியிருந்த போதிலும் கூட நிலைவரங்கள் மேம்பாடடைவதற்குப் பதிலாக மேலும் மோசமாகிக் கொண்டு போவதையே காணக் கூடியதாக இருக்கிறது. அதன் விளைவாக இறுதியாக சிவநேசன் தனதுயிரைப் பலி கொடுத்திருக்கிறார்.

தன்னடக்கமும் எளிமையும் கொண்ட சிவநேசன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதற்காகவே ஆபத்துமிகுந்த காலகட்டத்தையும் பொருட்படுத்தாமல் அரசியலில் பிரவேசித்தவர். இந்த இளம் அரசியல் வாதி பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த மிகக் குறுகிய கால கட்டத்திற்குள் தமிழ் மக்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உறுதியாகக் குரல் கொடுத்து வந்தவர். இலங்கையில் அண்மைக் காலமாகத் தீவிரமடைந்திருக்கும் படுமோசமான மனித உரிமை மீறல்களான ஆட்கடத்தல்கள், பணம் பறிப்பு, நீதி விசாரணைக்குப் புறம்பான கொலைகள், ஆட்கள் காணாமல் போதல், எந்தவித காரணமுமின்றி தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கைது செய்யப்படுதல் சம்பவங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த இயக்கங்களில் சிவநேசன் தீவிரமாகப் பங்கேற்று துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். அத்தகைய கொள்கைப் பற்றும் துடிப்பும் கொண்ட இளம் அரசியல் வாதியின் உயிர் அவமே பறிக்கப்பட்டிருக்கிறது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com