அநுராதபுரம் பசவக்குளம் பகுதியில் பத்து கிலோ கிராம் எடை கொண்ட கிளைமோர் குண்டொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் பிரேம தெரிவித்தார் .
நேற்று சனிக்கிழமை காலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே பசவக்குளத்தினருகில் செல்லும் வீதியில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் குண்டு கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிளைமோர் குண்டை கண்டுபிடித்த பொலிசார், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் உதவியுடன் கிளைமோரை செயலிழக்கச் செய்துள்ளனர்.
இப்பகுதியில் பிரதான இராணுவ முகாமென்று இருப்பதால் இராணுவ வாகனங்களை இலக்கு வைத்தே இக்கிளைமோர் குண்டு பொருத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை பசவக்குளம் பகுதியிலிருந்து கைது செய்துள்ளதாகவும் இவர்களிடம் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அநுராதபுரம் விமாப்படைத்தளம் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்களென இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வர்கள் கிளைமோர் குண்டு கண்டெடுக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.