* புலிகள் தெரிவிப்பு
மன்னாரில் கடந்த இரு நாட்களில் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளை தாங்கள் முறியடித்துள்ளதாகவும் இந்த முறியடிப்புத் தாக்குதலில் 22 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 72 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்;
"மன்னார் திருக்கேதீச்சரம் பகுதியில் மாந்தையிலிருந்து சேத்துக்குளம் வழியாக பாப்பாமோட்டை நோக்கி படையினர் வெள்ளிக்கிழமை பெருமெடுப்பிலான முன்னகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மிகச் செறிவாக சகல ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைத் தளங்களிலிருந்தும் படையினர் கடும் ஷெல் தாக்குதல்களுடனும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களுடனும் பின் தளங்களிலிருந்து டாங்கிகளின் கடும் பீரங்கித் தாக்குதல்களுடனும் படையினர் நேற்று முற்பகல் பாரிய அளவில் இம் முன்நகர்வை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
4 மணிநேரம் வரை நடத்தப்பட்ட இந்த முறியடிப்புத் தாக்குதலில் படையினர் மீது கடும் ஷெல் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர். இதில் படையினர் பலத்த இழப்புகளுடன் பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்குத் திரும்பி விட்டனர்.
நேற்று மீண்டும் இதே பகுதியில் முன்னகர்வுத் தாக்குதலை படையினர் நடத்தினர். நேற்று சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு இந்த முன்னகர்வு பலத்த ஷெல் வீச்சுக்களுடனும் பல்குழல் ரொக்கட்டு தாக்குதலுடனும் டாங்கிகளின் பீரங்கிச் சூடுகளுடனும் நடத்தப்பட்டது.
படையினரின் இந்த முன்னகர்வு விடுதலைப் புலிகளின் கடுமையான ஷெல் தாக்குதல் மற்றும் முறியடிப்புத் தாக்குதலின் மூலம் முறியடித்து படையினரை பழைய நிலைக்கு பின் வாங்கச் செய்தனர்.
நேற்று பிற்பகல் 3 மணிவரை நடத்தப்பட்ட கடுமையான முறியடிப்புத் தாக்குதலில் படையினரில் 12 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிக படையினர் காயமடைந்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் பண்டிவிரிச்சானிலிருந்து மடுவை நோக்கி பெருமெடுப்பிலான நகர்வு படையினரால் மேற்கொள்ளப்பட்டது. படையினரின் கடும் ஷெல் வீச்சுடன் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினர். முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய மோதல் மாலை 6 மணிவரை நீடித்தது.
இதில் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டன. இதில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன், 30 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.