மொனராகலை புத்தல பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
புத்தல கலகே காட்டுப் பகுதியிலேயே நேற்றுக் காலை 9.45 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
உழவு இயந்திரமொன்றில் சென்றுகொண்டிருந்த இராணுவத்தினர் மீதே இந்தக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் மூன்று படையினர் படுகாயமடைந்த நிலையில் புத்தல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அம்பாந்தோட்டை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு ஒருவர் மரணமானார்.
ஏனைய இரு படையினரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் படையினர் சென்ற உழவு இயந்திரமும் பலத்த சேதமடைந்துள்ளது.
இத்தாக்குதலையடுத்து காட்டுப் பகுதியில் பலத்த தேடுதல்கள் நடைபெற்று வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.