மன்னார் மாவட்டத்திலுள்ள பல்வேறு படைமுகாம்களிலிருந்தும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி மிகக் கடுமையான ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மன்னார் சவுத்பார், தள்ளாடி படைமுகாம்களிலிருந்து நேற்று சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் மிகக் கடுமையான பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேநேரம், உயிலங்குளம், முருங்கன் மடு வீதிச் சந்தி, கட்டையடம்பன் படைமுகாம்களிலிருந்து மிகக் கடுமையான ஷெல் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து மன்னார் மதவாச்சி பிரதான வீதி நேற்று காலை 10 மணி முதல் 12 மணிவரை மூடப்பட்டிருந்தது.
இராணுவ கனரக வாகனங்கள், அம்புலன்ஸ் வண்டிகள் என்பனவும் பறையனாலங்குளம் முதல் உயிலங்குளம் வரையும் நிறுத்தப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது.
இந்த ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் காரணமாக மன்னார் பிரதேச மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர்.
அதேநேரம், இந்தத் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்களை உடனடியாக அறிய முடியவில்லை.