சர்வதேச மனிதாபிமானச் சட்டமானது தேர்ந்தெடுக்கப்படும் ஒரு விடயமல்ல. மாறாக சகல நாட்டு அரசாங்கங்களுக்குமுரிய கடப்பாடு இதுவாகும். இந்த சர்வதேச மனிதாபிமான சட்டமானது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களையும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களையும் வெவ்வேறாக பிரித்துக் காட்டும் ஒன்றாகும் என்று பிரிட்டிஷ் துணைத் தூதுவர் லெஸ்லேகிரைக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உறவுகள், கேந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான கடல்வழிப் பாதுகாப்பு சேவைச்சட்டம் தொடர்பான கருத்தரங்கில் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பான விரிவுரையின்போதே பிரிட்டிஷ் துணைத் தூதுவர் லெஸ்லே கிரைக் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனிதாபிமானச்சட்டம் எம்மை எவ்விதம் பாதிக்கின்றது என்பது குறித்து புரிந்துகொள்வதற்கு பிராந்திய மட்டத்திலான அனுபவங்கள் எதிர்கால நோக்கங்களை பகிர்ந்து கொள்வதும் அவசியமானது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் கருத்தரங்கில் இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஒரு வாரகாலம் இடம்பெறும் இந்தக் கருத்தரங்கிற்கு சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள் அனுசரணை வழங்குவதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரலாயம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மனித உரிமைகள் சட்டத்தின் பங்களிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சர்வதேச மனிதாபிமானச் சட்ட விதிகளை கைக்கொள்வதை மேம்படுத்துதல் ஆகியவையே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.