மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் பதவி விலகுவதென எடுத்திருக்கும் தீர்மானத்தையிட்டு செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடும் கவலை தெரிவித்துள்ளார்.
தனது 4 வருட பணிக்காலம் முடிவடைந்ததும் பதவியை விட்டு விலகப் போவதாக நேற்று முன்தினம் லூயிஸ் ஆர்பர் உறுதிப்படுத்தியிருந்தார்.
`மனித உரிமைகளுக்காக அசாதரணமான முறையில் மிக ஊக்கத்துடனும் முயற்சியுடனும் தனித்துவமான விதத்திலும் லூயிஸ் ஆர்பர் குரல் கொடுத்து வந்தார். மனித உரிமை விவகாரங்களுக்கு ஐ.நா. அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அவரின் பணிகளினால் நான் மிகவும் கவரப்பட்டேன் என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.
ஜெனீவாவில் பான் கீ மூன் இது தொடர்பாக விடுத்த அறிக்கையானது நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் பதவியிலிருந்து தான் விலகத் திட்டமிட்டிருப்பதாக ஆர்பர் அறிவித்திருந்தார். எதிர்வரும் ஜூனுடன் அவரின் பதவிக்காலம் பூர்த்தியடைகின்றது.
ஈராக் யுத்தம் தொடர்பாக புஷ்ஷின் நிர்வாகத்துடன் முரண்பட்டதையடுத்து லூயிஸ் ஆர்பரின் பதவிக்காலம் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. மரண தண்டனை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை புஷ் நிர்வாகத்துடன் முரண்பட்டது.
துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் நாடுகளின் தேசிய சட்டமுறைமைகளிலுள்ள குறைபாடுகள் பற்றியோ அரசாங்கங்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புகள் மீதான விமர்சனங்களை முன்வைக்க லூயிஸ் ஆர்பர் ஒருபோதும் தயங்கியதில்லையென பான் கீ மூன் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் கொள்கையை ஆர்பர் உறுதியாக பின்பற்றியவரெனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.
லூயிஸ் ஆர்பர் விட்டுச் செல்வது ஐ.நா.வின் பரந்துபட்ட மனித உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகளுக்கு வலுவூட்டுவதுடன் நீதி, பதிலளிக்கும் கடப்பாடு, மறுசீரமைக்கப்பட்ட பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் குடியியல் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் தொடர்பாக முழு அளவிலான பாரபட்சமற்ற அணுகு முறை என்பவற்றில் அவர் அதிகளவுக்கு கவனம் செலுத்தியவர் என்றும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் உயர் நீதிமன்ற நீதியரசரான லூயிஸ் ஆர்பர், முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா ஆகியவற்றுக்கான ஐ.நா.வின் போர்க்குற்ற நீதிமன்றங்களிலும் விசாரணையாளராகப் பணியாற்றியவராகும். 2004 இல் அவர் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் ஸ்தானிகராகப் பதவியேற்றார்.
தனது வெளியேற்றம் தொடர்பான அறிவிப்புடன் லூயிஸ் ஆர்பர், கடந்த வெள்ளிக்கிழமை தனது வருடாந்த இறுதி அறிக்கையையும் சமர்ப்பித்திருக்கிறார். மேற்கு தார்பூரிலும் இலங்கையிலும் மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மோதல்களினால் ஏற்பட்டிருக்கும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை அந்த அறிக்கையில் அவர் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
காலத்துக்குக் காலம் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் மீளாய்வானது முதலாவதாக வளர்ச்சி குன்றிய நாடுகள் மத்தியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென மனித உரிமைகள் பேரவைக்கு அவர் தெரிவித்திருக்கிறார்.
மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வு ஜூனில் இடம்பெறவுள்ளது. அந்த அமர்வின் போது தனது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டவை தொடர்பாக ஆராய்வதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆர்பர் உறுதியளித்திருக்கின்றார்.