* வருடாந்த அறிக்கையில் இலங்கை பற்றி சிறு குறிப்பு மட்டுமே
இலங்கையில் வன்முறைகள் கடந்த டிசம்பரின் பின்னர் மேலும் அதிகரித்திருப்பதையிட்டு கவலையடைந்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவைகள் அதிகளவில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனது வருடாந்த அறிக்கையை அவர் சமர்ப்பித்து உரையாற்றினார்.
தனது பதவிக்காலம் 2008 ஜூனுடன் முடிவடைவதாகவும் அடுத்த பதவிக்காலத்திற்கு தான் தொடர்ந்தும் இருக்க விரும்பவில்லையெனவும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கி மூனிடம் தான் அறிவித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஆர்பர் இந்த வருடாந்த அறிக்கையே தனது இறுதி அறிக்கையாக இருக்குமெனவும் கூறியுள்ளார்.
ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் பலவற்றில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்ட அவர் கடந்த டிசம்பரின் பின்னர் இலங்கையில் வன்செயல்கள் மேலும் அதிகரித்திருப்பதையிட்டு தான் கவலையடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது வெளிப்படைத் தன்மையும் பதிலளிக்கும் கடப்பாடும் அதிகளவு தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடொன்று மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அந்த நாட்டுடன் உடன்படிக்கை செய்த அமைப்புகள் மிகவும் முக்கியமானவையெனவும் ஆதலால் அந்த அமைப்புகளை மேம்படுத்துவது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுக்கும் ஐ.நா.செயலக பிரதிநிதிகளுக்கும் இடையிலான உறவுமுறைகள் தொடர்பில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்படும் பக்கச்சார்பான குற்றச்சாட்டுகள், ஊகங்கள், சீர்குலைக்கும் விதத்திலான செயற்பாடுகள் என்பன உயர்ஸ்தானிகரினதும் மற்றும் அவரின் அலுவலக உறுப்பினர்களினதும் தனித்துவத்திற்கு பாதிப்பானவையெனவும் பரஸ்பர கலந்துரையாடல் என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைக்கு அப்பாற்பட்டதென்பது தனது அபிப்பிராயமென்றும் ஆர்பர் கூறியுள்ளார்.
தயான் ஜயதிலக
ஐ.நா.வுக்கான இங்கையின் நிரந்த, வதி விடப் பிரதிநிதியான தயான் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில்;
சில அபிப்பிராயபேதங்கள் இருப்பினும் இலங்கையுடன் உயர்ஸ்தானிகர் ஒத்துழைப்புடன் செயற்படுவதையிட்டு இலங்கை நன்றியுடன் இருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை தொடர்ந்தும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துடன் ஒத்துழைத்து செயற்படுமெனவும் குறிப்பிட்ட அவர், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப் படவேண்டுமென உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தாரெனவும் இலங்கை தனது சகல பிரஜைகளிலும் கரிசனையுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை மனித உரிமைகள் தேசிய நிறுவனம் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கனடா பிரதிநிதி ரெரி கோர் மியர்
இந்த அமர்வில் கனடா பிரதிநிதி ரெரி கோர்மியர் கருத்துத் தெரிவிக்கையில்; மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை அலுவலகத்தின் உதவியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன் நாடுபூராகவும் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக அறிக்கையிடுவதற்கான முழுமையான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் பிரதிநிதி
பிரான்ஸின் பிரதிநிதி ஜேன் பப்ரிஸ்ரி மத்தேய் கருத்து தெரிவிக்கையில்; இலங்கையில் நிலைவரம் மோசமடைந்து வருவது கவலையளிப்பதாக இருப்பதாகவும் அங்கு பிராந்திய அலுவலகத்தை திறப்பதற்கு ஆதரவளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன் மனித உரிமைகளைப் பாதுகாப்போர் மற்றும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அதிகாரிகள் முழுமையான சுதந்திரத்துடன் பணியாற்றக் கூடியதாக இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான்
இதேசமயம், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து லூயிஸ் ஆர்பர் தனது அறிக்கையில் குறிப்பிடத்தவறி விட்டதாக பாகிஸ்தான் பிரதிநிதி மசூட்கான் விசனம் தெரிவித்திருக்கிறார்.