Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பயங்கரவாதம் என்றால் என்ன?
[01 - April - 2008] [Font Size - A - A - A]
- நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்-

(நேற்றைய தொடர்ச்சி)

சட்ட மாணவர்கள் ஹமுராபிக் கோவை (Code of Hammurabi) என்பது பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் சட்டம் இயற்றிய ஹமுராபி கைக்குக் கை காலுக்கு கால் , பல்லுக்குப் பல் , உயிருக்கு உயிர் என்ற விதத்தில் அரசனானவன் குற்றம் புரிவோர் சம்பந்தமாக மாற்று நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்க வேண்டும் என்றார். அதாவது உன்கையை ஒருவன் முறித்தால் அரசன் முறித்தவன் கையை முறிக்க வேண்டும். அதுதான் முறை அப்படித்தான் சட்டம் அமைய வேண்டும் என்று கூறி அவ்வாறே பூர்வீகக் குடிகள் நடந்தும் வந்தார்கள். கண்டிய அரசன் ஷ்ரீவிக்கிரம இராஜசிங்கன் காலத்தில் அப்பேர்ப்பட்ட தண்டனைகளிலும் பார்க்கக் கொடிய தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், அறிவில் மேம்பட்ட 21 ஆம் நூற்றாண்டில் ஒரு மாற்றம் வேண்டாமா? இன்றைய கால அறிவுச் சூழலின்படி ஏதாவது ஒரு தீச்செயலுக்கு ஏதுவாக இருந்த காரணிகளைக் கண்டறிந்து அவற்றை இல்லாதாக்குவதுடன் குற்றஞ் செய்தவனைத் திருத்துவதுதான் இன்றைய பாணி. இன்றைய காலச்சிந்தனை. அப்படியானால் பயங்கரவாதம் எனப்படும் வன்முறை நடைமுறை ஏன் எழுப்பியது என்று கண்டறிய வேண்டியது இன்றைய அறிவுச்சூழலின் முக்கியமான ஒரு ஆராய்வு.

ஆனால், எந்த அரசும் அதை ஆராய்வதாகத் தெரியவில்லை. அமெரிக்க அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அந்தக் கேள்விக்கே இடமில்லை. ஏன் என்றால் உலகின் பெருவாரியான பயங்கரவாதச் செயல்களுக்கு காரணகர்த்தாவே தொடர்ந்து அரசாற்றிய அமெரிக்க அரசாங்கங்களே. இதை நான் கூறவில்லை. அமெரிக்க அறிஞர்களே இதைக் கூறுகிறார்கள். இவ்வாறு அந்நாட்டில் கூறமுடியும் என்பதே அந்த நாட்டின் சிறப்பம்சம். வேறு நாடுகளில் அப்படிக் கூறுபவர்களை வெள்ளை வானில் வந்து கடத்திச் சென்று விடுவார்கள்.

சதாம் ஹுசேனைத் தட்டிக் கொடுத்து எழுப்பி விட்டார்கள் அமெரிக்க அரசாங்கத்தினர். அவரை தமக்குத் தேவையில்லாத போது அவருக்குப் பயங்கரவாதி முத்திரை குத்தி அவரை அழிக்க வழிவகுத்தவர்களும் அவர்களே. ஆகவே வன்செயல்களுக்கு வித்திட்டவர்கள் வளர்ந்து வந்திருக்கும் மரத்தின் விதைகளை ஆராய முற்படமாட்டார்கள்.

இலங்கையை எடுத்துக் கொண்டால் இங்கும் அப்பேர்ப்பட்ட நிலைமையில் மாற்றம் இல்லை என்று தெரியவரும். ஒற்றுமையாக ஓரணியின் கீழ் ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்து வந்த பல் இன, பல் மத, பல்வேறு மக்கள் மத்தியில் வேறுபாடுகளை உள் நுழைத்து, பெரும்பான்மையோர் என்று அரசாங்க அதிகாரத்தில் இருந்தவர்களின் இனத்த, மதத்தவர்களை வேறுபடுத்தி அவர்கள் சார்பில் சிறுபான்மையினரை ஜனநாயக வாக்கின் அடிப்படையில் பிரித்தொதுக்கி, கல்வி அல்லது தொழில் மேம்பாட்டிலேயே காலதிகாலமாகக் கரிசனை காட்டி வந்த வடக்கு கிழக்கு மாகாண மக்களை ஏமாற்றி, இடர் உறச் செய்து, வன்முறை காட்டி, வன்செயல்களைக் கட்டவிழ்த்து அவர்களை அல்லற்படுத்திய தொடர் அரசாங்கங்கள் இன்றைய வன்முறைகளுக்குத் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உள்ளூர உணர்ந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை. அரச பயங்கரவாதத்தின் பிரதிபலிப்பே மக்கள் வன்முறைகள் , இயக்க வன்முறைகள் , ஏன் பாதாள கோஷ்டிகளின் வரம்பற்ற வன்முறைகள் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

அதனால்தான், அடிப்படையற்ற விதத்தில் அதிரடிச் சட்டங்கள் உருவாக்கி அரச வன்செயல்களையும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதுவரை காலம் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளையும் வன்செயல்களையும் மூடி மறைத்து பயங்கரவாதம் , பயங்கரவாதிகள் என்ற நாமங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளத் தலைப்பட்டுள்ளார்கள். ஆட்சியில் இருப்பவர்கள்.

இன்றைய தமிழ் இளைஞர்களின் வன்முறைக்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று , இரண்டை இங்கு பார்ப்போம். முதலாவதாக தொடர்ந்து நடைபெற்று 1958, 1961, 1977, 1979, 1983 ஆகிய வருட இனக்கலவரங்களுக்குப் பின்னணியில் யார் நின்று அவற்றை இயக்கி வைத்தார்கள் என்பது கண்டறியப்படவில்லை. அக்கலவரச் சம்பவங்களுக்கு எவரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவுமில்லை. ஒரு கல்லூரியினுள் குழந்தைகள் யாரோ நபர்களினால் தொடர்ந்து இம்சைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அதிபர் அவர்களை அடையாளம் காணவில்லை என்றால் அதிபருக்கும் அந்த நபர்களுக்கும் இடையில் ஏதோ ஒரு இரகசிய ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் நினைப்பதில் தவறு ஏதும் இல்லை.

இலங்கையில் நடந்தவற்றிற்கு உதாரணமாக அரசாங்க அதி பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றினுள் குட்டிமணி போன்றவர்களுக்கு ஏற்பட்ட துர்கதிக்கு பொறுப்பான சூத்திரதாரிகள் யார் என்று கண்டறிய நாட்டின் அரசாங்கத்திற்கு திராணி இருக்கவில்லை. நேர்மை இருக்கவில்லை. திறமை இருக்கவில்லை. ஆகவே தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் இனப்படுகொலைகளை வரவேற்றன என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

பிந்துனுவவயில் 27 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த போது அதற்குப் பொறுப்பானவர்கள் இன்றும் வெளியில் இருந்து நையாண்டி செய்கின்றார்கள் நம்மைப்பார்த்து. எவருமே குற்றவாளிகளாகக் காணப்படவில்லை. இதற்கு உச்சநீதிமன்றம் கூட உடந்தை என்று கூறலாம்.

அரச படைகளின் ஊடாகவும் அரச அசுர சட்டங்கள் ஊடாகவும் மக்களை இம்சைக்கு உட்படுத்துவது அதற்கு அஹிம்சை முறையில் எதிர்ப்புத் தெரிவித்தால் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது சத்தியாக்கிரகங்களை ஒடுக்குவது சாத்வீகப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது இது தான் நாங்கள் சுதந்திரம் பெற்ற பின் முதற் காலகட்டத்தில் நடந்தேறிய நாடகங்கள்.

1976 இல் முதிர்ந்த தமிழ்த் தலைவர்கள் சேர்ந்து இந்நாட்டில் பிரிவினை அன்றி வேறு வழியில்லை என்று வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்தபின் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டதும் அதை முறியடிக்க வன்முறைகளில் அரசு ஈடுபட்டு அதனால் சுதந்திரம் கோரும் மக்களை ஒடுக்க முடியாது என்று கண்டதும் கடந்த பத்து வருட காலத்தில் அவர்கள் சுதந்திர தாகத்தை ஒடுக்கப் பயங்கரவாதம் என்ற போர்த் தந்திரத்தை வெகுவாக உபயோகித்து வருகின்றனர்.

பயங்கரவாதம் என்பது மனதில் உள்ள ஒரு அழுக்கு. குற்றம் புரிந்தவர்கள் தம் குற்றத்தை மூடி மறைக்க உபயோகிக்கும் போர்க்கலவை அது. அந்த அழுக்கை இன்றைய அரசாங்கங்கள் பல பெருமளவில் தமது உள்ளங்கையில் சுமந்து வருகின்றன. தமக்கு வேண்டாதவர்களைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவதே இன்றைய அரசியல் சாணக்கியம், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இலங்கைக்குக் கற்றுத் தந்த நவீன போர்த்தந்திரம் இது. சர்வதேச மக்கட் பாதுகாப்புச் சட்டங்கள், ஐக்கிய நாடுகளைக் கட்டுப்படுத்தும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், சாசனங்கள் எல்லாம் இருந்தும் இந்தப் போர்த் தந்திரம் பல நாடுகளால் ஒப்பேற்றப்பட்டு வருகின்றது. மக்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திவிட்டால் அவர்களின் கோரிக்கைகளைப் பிரச்சினைகளை ஆராய வேண்டிய கடப்பாடு அரசாங்கங்களுக்கு இல்லாமற் போய்விடும். தாம் மனித நேயத்துடன், மனிதாபிமானத்துடன் நடக்கவில்லை என்பதை இதனால் மூடி மறைத்துவிடலாம். இதுதான் அவர்களின் சாணக்கியம்.

மனித உரிமைகளை பற்றிய சர்வதேச உலகளாவிய விளம்பலானது தொடக்கத்திலேயே அதன் முன்னுரையில் பின்வருமாறு கூறுகின்றது.

"ஒடுக்கு முறைகளுக்கும் நியாயமற்ற கொடுங்கோன்மைக்கும் எதிராக மக்கள் எழுந்து வன்செயல்களில் ஈடுபடாது தவிர்ப்பதற்கு நாடுகளின் சட்டத்தால் மனித உரிமைகள் பாதுகாத்துப் பரிபாலிக்கப்பட வேண்டும்". (Vide Preamble to the Universal Declaration of Human rights).

இதற்குக் காரணம் 1789ஆம் ஆண்டின் பிரான்சியப் புரட்சி கொடுங்கோல் ஆட்சிக்கெதிரான மக்களின் நியாயமான எழுச்சியே என்று அன்றைய சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

இலங்கையின் அரசியல் யாப்பு நிபுணர்களில் ஒருவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான டெஸ்மன்ட் ஃ பெர்னாண்டோ அவர்கள் அண்மையில் பின்வருமாறு கூறினார்.

"தனிநாடு கோருவது என்பதைக் குற்றமாக்கும் இலங்கை அரசியல் யாப்பின் 6 வது திருத்தம் அவ்வாறு கோருவதைத் தடுக்க அதன் பொருட்டு ஆதனப்பறிமுதல், பதவிப் பறிமுதல் போன்ற தண்டனைகளை வழங்கியிருப்பது,

சர்வதேச மனித உரிமைகள் விளம்பல் ஆவணத்தின் 19 ஆவது ஷரத்துக்கு முரணானது". சர்வதேச சட்ட ஆவணங்களுக்கு முரணாகவே எங்கள் 6 ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டம் அமைந்துள்ளது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் திரு. பெர்னாண்டோ அவர்கள்.

அடுத்த காரணந்தான் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் சிறுபான்மையினருக்கு அடிப்படைச் சலுகைகள் சிலவற்றை வழங்கும் அரசியல் உடன்பாடுகளை ஏற்படுத்தி அதன் பின்னர் அவற்றை உதறித் தள்ளி வந்தமை. பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம், டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகிய இரண்டுமே கிழித்தெறியப்பட்டன. இன்று போர் நிறுத்த உடன்பாட்டைக் கூட கிழித்தெறிய வேண்டும் என்று கோரப்படுகிறது. இந்தச் சூழலில் நியாயத்திற்கு இலங்கையில் இடமில்லை என்ற நிலைப்பாடே சிறுபான்மையின மக்களின் மனதில் மேலோங்கி நின்று வருகிறது. உணர்ச்சி மிக்க இளைஞர்கள் இதனால்தான் கொதித்தெழுந்துள்ளார்கள்.

அரச பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் அரசாங்கங்கள் ஒரு முக்கிய சட்டக் கருத்தை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் ஜனநாயக நாடுகளுக்கான விகிதசமானக் கோட்பாடு (The Principal of Proportionality). அதாவது ஜனநாயக அரசாங்கம் ஒன்றிற்கு எதிராக எவரேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த நடவடிக்கைகளுக்கு விகித சமமான முறையிலேயே மாற்று நடவடிக்கைகள் அப்பேர்ப்பட்ட அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் அசமான கொடூரமான மாற்று நடவடிக்கை வன்முறை நிலைமையை மேலும் மோசமடையச் செய்யக்கூடாது. ஆகவே முன்னர் சத்தியாக்கிரகம் இருந்த தலைவர்களை அடித்துத் துன்புறுத்தி சிறையில் அடைத்ததும் விகித அசமான நடவடிக்கையாகும். இன்று மாவிலாறை மடை திறவாது மூடியமைக்காக சூழவிருக்கும் மக்கள் யாவரையும் இடம் பெயரச் செய்து மந்தைகள் போல் விரட்டியடித்துப் பட்டினி போட்டு வருவதும் விகித அசமான நடவடிக்கையே.

இலங்கையில் நடப்பது அரச பயங்கரவாதமே அன்றி வேறில்லை என்பதை எப்பொழுது உலக நாடுகள் உணர்கின்றனவோ அன்றுதான் நாட்டில் அமைதியும் சமாதானமும் பிறக்க ஏதுவான சூழல் அமையும். அதற்கிடையில் எத்தனை மரணங்கள், எத்தனை பட்டினிச் சாவுகள், எத்தனை ஆட்கடத்தல்கள், எத்தனை இடமாற்றங்கள், எத்தனை வன்செயல்கள், எத்தனை நட்டங்களை மக்கள் அனுபவிக்கப் போகின்றார்களோ தெரியாது. பெருமனைப் பயங்கரவாதம் விரைவில் நீங்க யாவரும் பற்றுடன் பிரார்த்திப்போமாக!

நன்றி: நக்கீரம்

Email this page Your Opinion Print this page
கவலை அளிக்கும் பெண் கருக்கொலை
அறிவுசார் பொருளாதார முறையின் சில பரிமாணங்கள்
பயங்கரவாதம் என்றால் என்ன?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com