கொ.காளீஸ்வரன்
பெண்கள் வருங்காலச் சுமை எனக் கருதப்படுவதால் பெரும்பாலான பெண் சிசுக்களுக்கு கருவறைக்குள்ளேயே முடிவுரைகள் எழுதப்பட்டுவிடுகின்றன.
ஆண், பெண் என்ற பாரபட்சமான போக்கு பெரும்பாலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த எழுத்தறிவு இல்லாத கிராமப் புற மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருகிறது.
1961 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1000க்கு 995 ஆக இருந்த குழந்தைகளின் விகிதாசாரம் (0-5 வயது) படிப்படியாகக் குறைந்து 1991 இல் 945 ஆகவும், 2001 இல் 939 ஆகவும் குறைந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 150 இலட்சம் முதல் 200 இலட்சம் வரை நமது நாட்டில் கருக்கலைப்பு நடப்பதாகவும் இதில் 40 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை பெண் குழந்தை என கண்டுபிடிக்கப்பட்டு கருவிலேயே அழிக்கப்படுவதாகவும் மருத்துவக் குழுமம் தெரிவிக்கிறது. கருக்கலைப்பினால் மட்டுமே ஆண்டுக்கு 20,000 கருவுற்ற பெண்கள் மரணத்தைத் தழுவுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதாரத் துறை கணிப்பீட்டின் படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பிறக்கும் பெண் குழந்தைகளின் விகிதம் குறைவாகவே உள்ளது.
சமூக, கலாசார பிரச்சினைகள், கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வின்மை, `ஆண் வாரிசு' வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
பெண்கள் கருவுற்றிருக்கும் போதே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய மருத்துவ தொழில்நுட்பங்கள் பெருகியுள்ளன. இவை ஆண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவிக்கவும் பெண் கருவை அழிக்கவும் வழிவகுத்து விடுகின்றன. பிறக்கப் போகும் குழந்தைகளின் குறைபாட்டைக் கண்டு பிடிக்கும் நோக்கத்தில் கண்டறியப்பட்ட இது போன்ற மருத்துவத் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவது வேதனைப்பட வேண்டிய விடயம்.
12 வாரங்களுக்கும் மேற்பட்ட நிலையிலும் கருவின் பாலினத்தைத் தெரிந்து கொண்டு நிகழும் கருக்கொலைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. நவீன வகையில் எளிதான `கருக்கலைப்பு மருத்துவ முறைகள்' அறிமுகப்படுத்தப்பட்டு வருவது சமுதாயத்தின் சாபக்கேடு.
இவற்றை முறைப்படுத்த `பிறக்கப் போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்) சட்டம்' 1994 இல் இயற்றப்பட்டது.
பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் `பிறக்கப் போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பங்கள் (பாலினத்தை தெரிவு செய்வதைத் தடை செய்தல்) சட்டம் 2002' என்ற புதிய சட்டமும் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இச்சட்டங்களில் கூறப்பட்டுள்ள பல ஷரத்துகளை மருத்துவர்கள் தொடர்ந்தும் மீறி வருகின்றனர். இதை அரசு முழுமையாகத் தடுக்க முடியாதது கவலை அளிக்கிறது.
ஆண் குழந்தைகளை மட்டும் கருத்தரிப்பதை உறுதி செய்யும் தொழில் நுட்பங்கள் பெருகி வருவதும் குழந்தைப் பேறின்மையைக் காரணம் காட்டி செயற்கைக் கருத்தரிப்பு என்ற போர்வையில் பாலினத்தைத் தெரிவு செய்வதற்கும் அதிக வாய்ப்புகள் தற்போது பெருகி வருகின்றன.
எனவே, அரசின் மக்கள் தொகைக் கொள்கை சுகாதாரக் கொள்கைத் திட்டங்களுக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதற்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
`பாலினத் தெரிவு பரிசோதனை என்பது அடிப்படையில் ஒரு மனித உரிமை மீறலே' பெண் கருவை அழிப்பது என்பதும் பெண்ணினப் படுகொலைதான். எனவே, இது படுபாதகக் குற்றம் என பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசார அமைப்புகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
பஞ்சாப், ஹரியானா, குஜராத், இமாசலப்பிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு பெண் கருக்கொலை நடைபெறுவது தெரியவந்துள்ளது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 1994 ஆம் ஆண்டு பாலின பாகுபாடு தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப் பரிந்துரை செய்வது குறித்து மத்திய சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது. இது வரவேற்கத்தக்கது.
பெண் குழந்தை பிறப்பு மற்றும் வாழும் உரிமையைப் பாதுகாக்கவும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மதத் தலைவர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், பொது நல அமைப்புகள் முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தினமணி