அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பசித்த வயிறுகளின் சவால் பற்றிய ஒரு ஆய்வறிக்கை உலகப்பட்டினிக் குறியீட்டெண் 2007 (Global Hunger Index) என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. 2000 - 2005 ஆண்டுகளில் 118 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தப் பட்டினிக்குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகம் 21 ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன் முயற்சியில் 189 நாடுகளின் அரசாங்கத்தலைவர்கள் கூடி ஆராய்ந்து அடுத்த இரண்டாயிரமாவது ஆண்டின் அபிவிருத்தி இலக்குகளை வரையறுத்து வெளியிட்டனர். 1990 இல் தொடங்கி 2015க்குள் எட்டப்பட வேண்டிய இந்த இலக்குகள் கடுமையான வறுமையையும் பட்டினியையும் ஒழிப்பது, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது, தாய்மைக் காலத்தில் பெண்களின் ஆரோக்கியம், எயிட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்களை எதிர்கொள்வது போன்றவற்றை உள்ளடக்கி அமைந்திருந்தன. இந்த இலக்குகளைப் பாதியளவாவது 2003 ஆம் ஆண்டுக்குள் அடைந்துவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. இதை மையமாக வைத்து மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த உலக பட்டினி குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. 1. ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஊட்டச் சத்து குறைவான மக்கள் எண்ணிக்கையின் வீதம் (உட்கொள்ளும் உணவின் அளவு உடலின் தேவைக்குக் குறைவாக உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை) 2. ஐந்து வயதுக்குக்குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை (வளர்ச்சி குறைந்த, சோகை பிடித்த குழந்தைகளின் வீதம்) 3. பிறந்த ஐந்தாண்டுகளுக்குள் இறந்துவிடும் குழந்தைகளின் (ஆரோக்கியமற்ற சூழல், போதுமான உணவு இல்லாமை காரணமாக நேரிடும் குழந்தை மரணங்கள்) எண்ணிக்கை.
இந்த மூன்று அளவுகோல்களை வைத்துக் கணக்கிட்டு 118 நாடுகளில் நிலவும் நிலைமைகளை இந்தப் பட்டினிக் குறியீட்டு எண் படம்பிடித்திருக்கிறது. இதில் குறைவான புள்ளிகள் முன்னேற்றகரமான நிலையையும் கூடுதலான புள்ளிகள் மோசமான நிலையையும் சுட்டிக்காட்டுவதாக அமையும். 10 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை மோசமானது என்றும் 20 புள்ளிகளுக்கும் அதிகமாகவுள்ள நாடுகளின் நிலைமை கவலைக்குரியது என்றும் 30க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றும் நாடுகள் கடும் கவலைக்குரியவை என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன. 118 நாடுகளின் பட்டியலில் இலங்கை 69 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. பாரிய பொருளாதார அபிவிருத்தியை அடைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் இந்தியா, 94 ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தியாவின் சில அயல் நாடுகள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்கு மேம்பட்ட நிலையில் காணப்படுகின்றன. பாகிஸ்தான் 88, நேபாளம் 90, பங்களாதேஷ் 103 ஆவது இடத்தில் இருக்கிறது. கடும் கவலைக்குரிய நாடுகளின் எண்ணிக்கை 12 மாத்திரமே என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறியீட்டு எண்ணைப் பொறுத்தவரை மிகவும் குறைவான புள்ளியோடு (0.87) லிபியா முதலிடத்தில் இருக்கிறது.
தாராளமாக வளங்கள் இருக்கின்ற உலகிலே சுமார் 85 கோடி 40 இலட்சம் மக்கள் இன்னும் கூட நீடித்த பட்டினியில் உழலுகிறார்கள். உணவுக்கான உரிமை ஒரு மனித உரிமையாகும். புதிய மிலேனியத்தின் தொடக்கத்திற்குப் பிறகு பட்டினியில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பட்டினியில் வாடுவதாகக் கணிப்பிடப்பட்டிருக்கும் மேற்கண்ட தொகையினரில் சிறுவர்களின் தொகை மாத்திரம் சுமார் 40 கோடியாகும். தங்களது வாழ்வைத் தீர்மானிப்பதில் எந்தப் பங்கையும் கொண்டிருக்கக் கூடிய பக்குவ நிலைக்கு வராத இந்தச் சிறுவர்களை வாட்டுகின்ற பட்டினி, உலகின் மனச்சாட்சிக்கே ஒரு சவாலாகும். உயிர் வாழ்வு மற்றும் மனித கௌரவத்தை நிர்மூலஞ்செய்கின்ற காரணிகளில் முக்கியமானதான வறுமையை ஒழிப்பதற்குப் பயனுறுதியுடைய செயற்றிட்டங்களை வகுக்காமல் வெறுமனே பிரகடனங்களைச் செய்து கொண்டிருப்பதால் நிலைவரத்தில் மேம்பாடு எதுவுமே ஏற்படப் போவதில்லை.