முக்கிய அரபு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளாதபோதிலும் அரேபிய லீக்கின் வருடாந்த உச்சிமாநாடு சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.
22 உறுப்பு நாடுகளைக் கொண்ட அரேபிய லீக்கின் 11 தலைவர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரு நாட்கள் நடைபெற்ற இம் மாநாட்டிற்கு எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் தமது கீழ்மட்ட பிரதிநிதிகளையே அனுப்பியுள்ளன.
லெபனானில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமைக்கு சிரியாவே காரணமென இந்நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதேவேளை லெபனான் இம் மாநாட்டை முழுவதுமாக பகிஷ்கரித்துள்ளது.
இம் மாநாட்டின் ஆரம்பத்தில் லெபனான் விவகாரங்களில் சிரியா தலையிடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த சிரிய ஜனாதிபதி பஸார் - அல் - அஸாட் லெபானின் அரசியல் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் எந்தவொரு அமைப்பிலும் தமது நாடு மனப்பூர்வமாக இணைந்து கொள்ளுமெனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரேபிய தலைவர்கள் இம் மாநாட்டை பகிஷ்கரித்தமையை விமர்சிக்கும் எந்தவொரு கருத்தையும் அஸாட் வெளியிடவில்லையென நிருபர்கள் தெரிவிப்பதுடன் இப் பிராந்தியத்திலுள்ள மேற்குலகு சார்பான நாடுகளுக்கும் சிரியாவுக்குமிடையில் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈரானுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுவதனூடாக சிரியா லெபனானின் அமைதியைக் குறைப்பதாக எகிப்து, சவூதி அரேபியா, ஜோர்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ள அதேவேளை அரேபிய நாடுகளை பிளவுபடுத்த முயற்சிக்கும் அமெரிக்காவின் சேவகர்களாக இந்நாடுகள் செயற்படுவதாக சிரியா குற்றஞ்சாட்டியுள்ளது.