* சர்தாரி கூறுகிறார்
பாகிஸ்தான் அரசு காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவே விரும்புகிறது. அதனை வைத்து நிழல் யுத்தம் செய்ய விரும்பவில்லை என ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து நடைபெறும் மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இஸ்லாமாபாத்தை வந்தடைந்துள்ள காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியுடனான சந்திப்பின் பின்னரே சர்தாரி இதனைத் தெரிவித்துள்ளார்.
சுமார் 30 நிமிட நேரம் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த சர்தாரி பாகிஸ்தானின் புதிய அரசு காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண விரும்புகிறது. எத்தகைய சூழ்நிலையிலும் எப்போதும் பேச்சுவார்த்தையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தேவையில்லை. செயற்றிறன் நிறைந்த நடவடிக்கைகள் தான் எமக்குத் தேவை. காஷ்மீரிலுள்ள இளைஞர்களுக்கு துப்பாக்கிகளுக்குப் பதிலாக பேனாக்கள் கொடுக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் இருக்கும் காஷ்மீர் மக்கள் தமது உறவினர்களை சுதந்திரமாக சந்தித்து உரையாடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்நடவடிக்கைகள் நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். நாங்கள் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வைக் காணவே விரும்புகிறோம். இதனை வைத்து நிழல்யுத்தம் செய்ய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மெகபூபா முப்தி;
பாகிஸ்தானில் பொறுப்பேற்றுள்ள புதிய தலைமை அமைதி முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் காணப்பட்ட முன்னேற்றத்தை இழக்கும் வகையில் அதனை அலட்சியப்படுத்தக் கூடாதெனத் தெரிவித்துள்ளார்.