பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள யூசுப் ரஸா கிலானி பாராளுமன்றில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மறைந்த பெனாசிர் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றிருந்தும் பிரதமரைத் தேர்வு செய்வதில் பாரிய இழுபறி நிலைகளுக்கு மத்தியில் கிலானி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை கிலானி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது ஜனாதிபதி முஷாரப்புக்கு ஆதரவான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கியு கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் புதிய பிரதமருக்கு ஒருமனதாக ஆதரவு அளித்தன.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான புதிய அரசு, பயங்கரவாதத்தை ஒழிக்க முன்னுரிமை அளிக்கும் என்று பாராளுமன்றத்தில் பேசிய கிலானி கூறினார்.
மேலும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து சரண் அடையும் தீவிரவாதிகளிடம் அரசு பேச்சு நடத்தும். கடந்த ஆண்டு அவசர நிலை இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவர்.
காஷ்மீர் மக்களின் விருப்பப்படி அவர்களது நீண்ட கால பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவர்களது தியாகம் வீண்போகாது என்று உறுதியளிக்கிறேன்.
நமது பக்கத்து நாடுகளுடன் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க நாம் பாடுபடுவோம். அனைவரோடும் நல்லுறவை வளர்ப்பதே பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை ஆகும்.
வாழு வாழவிடு என்ற கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதேபோன்று மற்ற நாடுகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவை விரும்பும் பாகிஸ்தான், இஸ்லாமிய நாடுகளுடனும் உறவை பலப்படுத்த வேண்டியது அவசியம். அயல் நாடான சீனா, பாகிஸ்தானின் பழைய நட்பு நாடு. ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. வளமான முன்னேற்றப் பாதையில் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார் கிலானி.
காஷ்மீர் பிரச்சினையை ஒதுக்கிவிட்டு, மற்ற துறைகளில் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி செய்வோம் என்று ஆளும் கூட்டணியின் தலைவரான பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் சர்தாரி கூறியிருந்தார். புதிய பிரதமர் கிலானி காஷ்மீர் பற்றி கூறியுள்ள கருத்து, சர்தாரியின் கருத்துக்கு மாறாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.