* தேசிய முஸ்லிம் கவுன்ஸில் வலியுறுத்தல்
மக்களின் நலனை கவனத்தில் கொண்டு அனைத்து முஸ்லிம் கட்சிகளும் பொதுச் சின்னமொன்றின் கீழ் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும் என தேசிய முஸ்லிம் கவுன்ஸில் வலியுறுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை பேரினவாத சக்திகளிடமோ, அல்லது ஆயுதக் குழுவினரிடமோ பறிகொடுத்துவிட்டு முஸ்லிம் சமூகத்தின் முதுகில் மீண்டுமொரு அடிமைப்பட்டயத்தை எழுதுவதற்கு முஸ்லிம் தலைமைகள் துணைபோய்விடக்கூடாது எனவும் முஸ்லிம் கவுன்ஸில் கேட்டுள்ளது.
இது தொடர்பாக கவுன்ஸில் தவிசாளர் செயிட் அஸ்லம் சக்காப் சற் மௌலானா, செயலாளர் நாயகம் எம்.ஐ.எம். வலீத் ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இன்றைய அரசியல் சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற முக்கிய அரசியல் செயற்பாடாகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரேயொரு பிராந்தியம் கிழக்கு மாகாணம்.
முஸ்லிம் சமூகத்திற்கான ஓர் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தக் கூடிய இடம் கிழக்குப் பிராந்தியமே. இப்பகுதி முஸ்லிம்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற கல்வி, கலாசார, சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு நிவாரணமும் தீர்வும் கிடைக்க வேண்டுமாயின் மாகாண ஆட்சி அதிகாரத்தை தம் வசப்படுத்துவது மிக அவசியமாகும்.
முஸ்லிம்களின் காணிகளை திட்டமிட்டு அபகரித்து வருகின்ற பேரினவாதம், கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவை தவிர கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் கீழ் எமது தாயக பூமியை சிங்கள மயமாக்கும் நகர்வுகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் பின்னணியிலேயே மாகாண ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு பேரினவாதம் முயற்சிக்கின்றது. அதற்காக ஆயுதக் குழுப் பிரதிநிதிகளை தலைமை ஆசனங்களில் அமர்த்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னைய இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்த வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஆயுதக் குழுவினர் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகளை இன்னும் எமது மக்கள் மறக்கவில்லை.
முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல தலைவர்களும் புத்திஜீவிகளும் இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டனர். கிழக்கு மாகாணப் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய முஸ்லிம் பொலிஸார் மாத்திரம் வேறுபடுத்தப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சிறுபான்மையினராக்கப்பட்டதுடன் அவர்கள் மீது வன்முறைகளும் கொடுமைகளும் முழு வீச்சில் கட்டவிழ்த்து விடப்பட்டதன் காரணமாகவே வடக்கு, கிழக்கு இணைப்பை ஏற்படுத்திய இலங்கை - இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசனம் என்று வர்ணிக்கப்பட்டது.
ஆனால், இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கத்தக்கதாகவே இன்னுமொரு அடிமைப் பட்டயத்தை அவர்களது முதுகில் எழுதுவதற்கான ஏற்பாடுகள் அரங்கேறி வருவதை முஸ்லிம் தலைவர்கள் அறியாமலில்லை.
இந்த அபாயகரமான சூழ்நிலையிலிருந்து முஸ்லிம் சமூகம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக முஸ்லிம் அரசியல் தலைமைகள், தமக்குள் இருந்து வருகின்ற கருத்து முரண்பாடுகளையும் கசப்புணர்வுகளையும் தற்காலிகமாகவேனும் ஒருபுறம் வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
இத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் கூட்டிணைந்து ஓரணியாகப் போட்டியிடுவது தொடர்பாக முஸ்லிம் தலைவர்களிடையே நேரடிப் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றபோதிலும் பொதுச் சின்னம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமல் கலைந்து சென்றமை கவலைக்குரிய விடயமாகும்.
எனவே, கட்சி மற்றும் தலைமைத்துவம் குறித்து அதிகம் யோசித்து, முஸ்லிம் கூட்டணி அமைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்காமல், சகல அணியினரும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் சிந்தித்து, விட்டுக்கொடுப்புகள் செய்து கூட்டமைப்பாகப் போட்டியிடுவதற்கு முன்வர வேண்டும் என முஸ்லிம் சமூகம் சார்பில் வலியுறுத்துகின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.