* ஊவா தமிழ் ஊடகவியலாளர் நலன்புரி இணையம்
"மொனராகல பிரதேச சபையிலும், வெளியிலும் மொனராகலப் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்து வந்த, பிரதேச சபையின் பிரதித் தலைவர் ஏ.என். முத்துலிங்கத்தின் குரலும் ஓய்ந்துவிட்டது. இவரின் இழப்பினால், மொனராகலைப் பகுதி தமிழ் மக்கள் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்".
இவ்வாறு ஊவா தமிழ் ஊடகவியலாளர் நலன்புரி இணையம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துவந்த மக்கள் பிரதிநிதி ஏ.என். முத்துலிங்கத்தின் இழப்பானது, எவராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பேயாகும். மலையகத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் பிரதிநிதியொருவர் துப்பாக்கிக் குண்டிற்கு இரையானது இதுவே முதல் தடவையாகும்.
மொனராகல தமிழ் மக்களின் மேம்பாட்டிற்கு அரசியல் ரீதியான உரிமைகளை பெற்றுக்கொடுத்து வந்த இவர், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வைத்தியத்துறை ரீதியாகவும் பெரும் சேவைகளை ஆற்றிவந்துள்ளார்.
மொனராகலயில் தனியார் மருந்தகமொன்றை நடாத்தி வந்த டாக்டர் முத்துலிங்கம் மனிதநேயத்தை முன்னிறுத்தி இலவச சேவைகளையும் மேற்கொண்டு வந்த சிறந்த சமூக சேவையாளருமாவார்.
மொனராகலப் பகுதி பெருந்தோட்டத்துறை தமிழ் மக்களின் இரட்சகராக, காவலனாக இருந்து வந்துள்ளார். இன, மத மற்றும் வசதிபடைத்தோர், ஏழை என்ற எத்தகைய பாகுபாடுகளுமின்றி, இவரது சேவைகள் அமைந்திருந்தன.
இத்தகையதோர் உத்தமனைக் கொலைசெய்த கயவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமேயாகும். அத்துடன், இக் கொலையானது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
அன்னாரது இழப்பினால் வாடும் அவரது குடும்பத்தாரின் துயரில், ஊவா மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் பங்குகொள்கின்றோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.