* மத்திய மாகாண அமைச்சர் அருள்சாமி
மலையக சமூக அமைப்புகள் கலை, கலாசார விழுமியங்களைப் பின்பற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் மலையக சமூக மேம்பாட்டிற்காகவும் தங்களது பணிகளை விஸ்தரித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய மாகாண தமிழ்க் கல்வி இந்து கலாசார அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற நுவரெலியா இந்துக் கலாசாரப் பேரவையின் 18 ஆவது வருடாந்த கலாசாரப் போட்டி பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
பேரவையின் தலைவரும், நுவரெலியா மாநகரசபை உறுப்பினருமான இரா. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அருள்சாமி தொடர்ந்து உரையாற்றுகையில் இப்பேரவை கடந்த 18 ஆண்டுகளாக நுவரெலியா மாவட்டத்தில் இந்து கலாசாரத்தை பேணி பாதுகாத்து வருவதோடு பல மாணவர்களுக்கு புலமை பரிசில்களையும் வழங்கிவருகிறது. க.பொ.த. சாதாரணதர, உயர்தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல கருத்தரங்குகளையும் இலவசமாக நடாத்திவருகின்றது.
இந்நாட்டில் மலையக சமுதாயம் தொடர்ந்தும் நாட்கூலிகளாக வாழ்ந்ததாக சரித்திரம் இருக்கக்கூடாது. ஏனைய சமூகங்களைப் போல சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்த சமுதாயமாக வாழ்வதற்கு இம்மாதிரியான பொது அமைப்புகள் செயற்பட வேண்டும்.
நுவரெலியா நகரில் இலைமறை காயாக இருந்த பல மாணவிகள் பரத நாட்டியத்தை முறையாக கற்று பல அரங்கேற்றங்கள் இம்மண்டபத்தில் நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் இந்தப் பரத நாட்டியத்தை ஒருசிலர் மாத்திரமே கற்றுவந்தார்கள். ஆனால், இன்று இந்நகரிலும் பலர் கற்று வருவதை நான் பாராட்டுகின்றேன். மலையக மக்கள் எதற்கும் சலித்தவர்கள் அல்ல அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவருவதற்கு இம்மாதிரியான அமைப்புகள் முன்வர வேண்டும். அவ்வாறு செயல்பட முன்வரும் அமைப்புகளுக்கு நான் மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் என்ற ரீதியில் எனது முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்குவேன் என்றார்.
இக் கலாசார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட அறிவிப்பாளர் போட்டிக்கும், பூக்கோலம், மாக்கோலப் போட்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, பரத நாட்டிய அரங்கேற்றம் செய்த மாணவிகளும், அதனை கற்பித்த ஆசிரியர்களும் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும், இவ்வைபவத்தில் நுவரெலியா பதில் நீதிவானும் சட்டத்தரணியுமான பி. இராஜதுரை, பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அதிபர் எம். மோகன்ராஜ் பேரவையின் பொதுச் செயலாளர் எம். செல்லையா உட்பட பலர் உரையாற்றினார்கள்.