முப்படைகளிலும் இணைந்து கொள்வதில் இளைஞர், யுவதிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் இவ் வருட ஆரம்பத்தில் இடம் பெற்ற முதற்கட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்டதைவிட பெருமளவானோர் படைகளில் இணைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற, வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரிகேடியர் உதய நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை முதற்கட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றன. இதில் 12,000 பேரை படையில் சேர்ப்பதே எமது நோக்கமாயிருந்தது. ஆனால் 12,175 பேர் படைகளில் இணைந்து கொண்டனர்.
படைகளுக்கான இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இன்று 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
இதில் எண்ணாயிரம் பேரை படைகளுக்கு இணைத்துக் கொள்வதே தங்கள் நோக்கமெனவும் தெரிவித்தார்.