யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு 18 வருடங்களின் பின்னர் எதிர்வரும் ஏழாந்திகதி முதல் மின்சாரம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்துள்ளது.
இதற்காக நெடுந்தீவிலிருந்த மின்பிறப்பாக்கியை எடுத்துவந்து புங்குடுதீவில் மின்சார சபை பொருத்தியுள்ளது.
இக்கிராமத்துக்கான மின் விநியோகத்தை எதிர்வரும் ஏழாந்திகதி திங்கட்கிழமை பகல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் ஆரம்பித்துவைப்பார்.
இக்கிராம மக்களுக்கு முதலில் மட்டுப்படுத்தப்பட்டளவில் காலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரையும் இரவில் ஆறு மணி முதல் பதினொரு மணி வரையும் மின்சாரம் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு சீன நிறுவனம் முப்பத்தைந்து மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கவிருப்பதால், விரைவில் புங்குடுதீவுக்கும் இருபத்துநான்கு மணித்தியாலமும் மின்சாரம் வழங்கவிருப்பதாக வடபிரதேச மின்சார சபை உதவிப் பொதுமுகாமையாளர் எஸ்.முத்துரட்ணம் தெரிவித்துள்ளார்.