கிழக்கு மாகாண முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லையென மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர் டி.சில்வா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பராக்கிரம பன்னிப்பிட்டியவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வழங்கப்பட வேண்டிய 10 பாதுகாப்பு வீரர்களுக்கு பதிலாக 8 வீரரை வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர்களில் இருவரை மனுதாரரின் கோரிக்கைக்கு அமைய தெரிவுசெய்வதற்கு வாய்ப்பளிக்குமாறும் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்குத் தெரிவித்தது.
அதன் பிரகாரம் இந்த மனு மீதான விசாரணைகள் ஜூலை மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, ராஜா பெர்னாண்டோ, அன்றூ சோமவன்ச முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.