இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு இந்த நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றி அனைவரும் ஒற்றுமையாக வாழும் சூழலை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொதுமக்கள் நல்லுறவுப் பிரிவு உயரதிகாரி ஐ.பி.கிரிஹாதெனிய தெரிவித்துள்ளார்.
முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு மட்டக்குளி கதிரானவத்தை விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸ் உயரதிகாரி எஸ்.ஐ.பத்மலால் தலைமையில் பொதுமக்கள் சந்திப்பொன்றை நடத்தியது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஐ.பி.கிரிஹாதெனிய தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
இன்று நான் உண்மையிலே சுகயீனமுற்றநிலையில் எனது கடமைக்காக அலுவலகத்திற்கு சமுகமளிக்கவில்லை. இருப்பினும் இந்த பிரதேச வாழ்மக்கள் என் மேல் வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கையை நான் வீண்படுத்த விரும்பவில்லை. ஆகவேதான் உங்கள் வேண்டுகோளுக்கிணங்க தற்போது நான் இங்கு வந்துள்ளேன்.
தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு என்னிடமோ என் கடமை நிலையத்தின் பொறுப்பதிகாரியிடமோ உண்மையிலே கிடையவே கிடையாது. எமக்கு தேவை, எம் தாய்நாட்டின் மக்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதேயாகும். அதுவே எமது குறிக்கோளாகும்.
அடுத்ததாக நான் இந்த நிலையத்திற்கு வந்து 3 மாதம்தான் ஆகின்றது. எமது இந்த மூன்று மாதங்களில் நான் நிறைய உங்களுக்காக செய்துள்ளேன் என்பதையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். தற்போது நாம் ஆரம்பித்திருக்கின்ற இந்த சிவில் பாதுகாப்பு பிரிவினருக்கு எமது நாட்டில் எம் பெருமதிப்புக்குரிய ஜனாதிபதியும் பூரண சம்மதம் தெரிவித்துள்ளார். அடுத்து உங்கள் ஆலோசனைப்படி 10 பேர் கொண்ட ஒரு சங்கத்தை உருவாக்கி தற்போது உங்களுக்கு நல்லதோர் தலைமையும் கிடைத்துள்ளது.
இது போன்ற சிவில் பாதுகாப்பு பிரிவு என்ற ஒரு பேரணியை உருவாக்கியதற்கு காரணம் பொலிஸார் மட்டும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது எமக்கு பொது மக்களின் பங்களிப்பும் தேவையாகும்.
இந்த கதிரானவத்தையில் இருந்து முகத்துவாரம் பொலிஸுக்கு 10 கிலோ மீற்றர் உள்ளது. ஒரு சந்தேக நபரை அவசரமாக பிடிக்க முடியாது. அதற்கு பிரதேச மக்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்படுகிறது. ஒரு சந்தேக நபர் வந்தால் நாம் தேடி பார்க்க வேண்டும். அப்படி நீங்கள் எமக்கு அறிவித்து நாம் அதை செவிமடுக்காதிருந்தால் உண்மையிலே பொறுப்பதிகாரியான நாங்கள் நஷ்டஈடு கட்ட வேண்டியநிலை வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த வாரங்களின் போது அளுத்மாவத்தையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன் எமது அதிகாரிகள் அதை சரியாக தேடிப் பார்த்திருந்தால் இன்று நாம் அந்த நிலைமைக்கு முகம் கொடுக்க தேவை இல்லை. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஆயிரம் தேவைகள் இருக்கலாம் இருப்பினும் அவைகளை விட்டு விட்டு நாம் தற்போது சமுகமளிக்க காரணம், இந்த கூட்டம் எமக்கு தேவை. இன்று பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் எமது பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு என்று நம்பி வந்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
என் மதிப்பிற்குரிய தாய்மார்களே, சகோதர சகோதரிகளே எமது தேவை சந்தேக நபர்களோ, காடையர்களோ, திருடர்களோ எவையாயினும் சரி பரவாயில்லை. உடனே எமக்கு அடையாளம் காட்டுங்கள் அவர்களை நீங்கள் எமக்கு அடையாளம் காட்டாமல் அடைக்கலம் கொடுத்தால், அது உங்களுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ தீங்கு விளைவிக்கக் கூடியதாயிருக்கும். அப்படிபோன்றவர்களை உடனடியாக நாம் ஒரங்கட்ட வேண்டும்.
எமது முகத்துவாரம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் சிரிவர்தன இந்த நிலையத்திற்கு வந்த பின் இங்குள்ள மக்களுக்கு நிறைய சேவைகள் செய்துள்ளார் என்பதையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். அவரின் வேண்டுகோள் என்னவென்றால், நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலையையும் ஒழுங்காக செய்ய வேண்டும். அது ஒவ்வவொருவருக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கும். அது எமது நிலையத்திற்கு மிக நீண்ட பெறுமதியை உண்டாக்கும் என்பதே அவரின் அறிவுரையாகும்.
நான் சுருக்கமாக கூறுகையில், களனி ஆற்றை எடுத்துக் கொள்வோம். அதில் வழிந்தோடிய நீரின் மணலை எடுத்தாலும் கற்களை எடுத்தாலும் அதிர் தண்ணீர் குறையப் போவதில்லை. அதுபாட்டில் அந்ந நீர் கடலுக்கு போய் சேரும். அதே போல்தான் பொலிஸாராகிய எமக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நாம் எந்த நேரமும் மக்களாகிய உங்களுடன் இருப்போம் என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகமூட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நாட்டில் வாழும் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது எமது நாடு. இது எமது மக்கள் என்று வாழ்ந்தால் எந்த விதமான பிரச்சினை வந்தாலும் எமக்கு அது தூசியாய் மாறிவிடும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தாய் மக்கள் என்று நினைத்து கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும்.