நாட்டின் சில பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மூவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் உட்பட நேற்று முடிவடைந்த 24 மணிநேரத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேற்படி கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொலைசெய்யப்பட்டவர் 50 வயது மதிக்கத்தக்கவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பாணந்துறை குறுக்கமுல்ல பகுதியிலுள்ள விகாரைக்கு சமீபமாக ஒருவர் நேற்று முன்தினம் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச் சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம லிதேகம பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவர் 18 கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அவர் ஆயுதங்களை ஒழித்து வைத்துள்ளதாகக் கூறிய இடத்திற்கு கூட்டிச் சென்றபோதே அவர் தப்பிக்க முற்பட்டபோது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக மேல்மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ண தெரிவித்தார்.
இதேவேளை, பலியான சந்தேக நபர் 27 வயது மதிக்கத்தக்கவர் எனப் பொலிஸார் தெரிவித்ததுடன், ஒழித்து வைத்த இடத்தில் ரி-56 ரகதுப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.
அநுராதபுர - குருநாகல் பிரதான வீதியில் கல்கமுவ பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இச்சடலம் இனம் காணப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
இச்சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கலேவெல, பலகமுவ பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் இச்சடலம் இனம்காணப்படவில்லை. சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவர் நேற்று முன்தினம் நாத்தாண்டியாவில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.