கல்முனை, கல்முனைக்குடி கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை மாலை சில மீன்பிடி வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
கல்முனை கடற்பரப்பில் அண்மைக் காலமாக தென்பகுதியிலிருந்து அழைத்து வரப்படுவோர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுருக்குவலை, டைனமற் மற்றும் ஆழ்கடலில் இவர்கள் மீன்பிடித்து வருவதால் உள்ளூர் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து கடந்த சில தினங்களுக்கு முன் உள்ளூர் மீனவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டதையடுத்து பல்வேறு தரப்பினரும் கூடி சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சட்டபூர்வமற்ற முறையில் இப்பகுதியில் எவரும் மீன்பிடிக்கக் கூடாதெனவும் தென்பகுதியிலிருந்து வந்து எவரும் மீன்பிடிக்கக் கூடாதெனவும் அறிவுறுத்தப்பட்டபோதும், தென்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் மீண்டும் மீன்பிடியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கல்முனைக்குடியில் நேற்று மாலை 6.30 மணியளவில் மீன்வாடிகள் சில தீக்கிரையாக்கப்பட்டன.
இதையடுத்து, அங்கு துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கு உள்ளூர் மீனவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவிக்கவே பெரும் பதற்றமேற்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு பள்ளிவாசலில் பெருமளவில் மீனவர்கள் கூடியிருந்தனர். இன்று அப்பகுதியில் ஹர்த்தால் அனுஷ்டிப்பது குறித்தும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.