*அக்ஷன்பாம் படுகொலை வழக்கில் சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
கோவர்தனியை அக்ஷன் பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் அவரின் பாதுகாப்பு தொடர்பில் கவலையடைந்திருக்கவில்லையென அக்ஷன்பாம் படுகொலை வழக்கில் சாட்சியமளித்த ஒருவர் கூறினார்.
கடந்த 2006 ஆகஸ்ட் மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 17 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றபோது, வழக்கிய சாட்சியத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட கனகரத்தினம் கோவர்த்தனியின் சார்பாக சாட்சியம் வழங்கிய அவர் மேலும் தெரிவிக்கையில்;
கோவர்த்தனி திருகோணமலையிலேயேதான் வசித்து வந்தார். ஆனால், சிலவேளைகளில் மூதூரிலேயே தங்கிவிடுவார்.
வழமையில் அவர்களது அலுவலக வாகனத்தில்தான் கடமைக்குச் செல்வார்.
2006 ஆகஸ்ட் முதலாம் திகதியும் திருகோணமலையில் இருந்துதான் வேலைக்குச் சென்றார்.
இவர் கையடக்கத் தொலைபேசி ஒன்றையே வழமையில் பயன்படுத்துவார். சிலவேளைகளில் தமது அலுவலகத்திலிருந்தும் அழைப்புகளை மேற்கொள்வதும் உண்டு.
நான் கோவர்த்தனியுடன் கதைப்பதைவிட அவரது தந்தையுடனேயே அடிக்கடி தொலைபேசியில் கதைத்துக் கொள்வேன். சிலவேளைகளில் கோவர்த்தனியுடனும் கதைத்ததுண்டு.
2006 ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஊடகங்கள் மூலம் அக்ஷன்பாமின் பணியாளர்கள் பதினேழுபேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதை நான் தெரிந்து கொண்டேன்.
இதேவேளை, அவர் கடமைக்குச் சென்றுள்ளார் என்பதை அவரது தந்தை கூறியே நான் அறிந்து கொண்டேன்.
மேலும் மூதூர் பிரதேசத்தில் பிரச்சினை ஆரம்பித்திருந்ததனையும் ஊடகங்கள் மூலம் நான் அறிந்திருந்தும், கோவர்த்தனியை அந்நிறுவன அதிகாரிகளே பாதுகாப்பாக கொண்டு வருவார்கள் என்ற எண்ணத்தால் அவரின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை.
ஆகஸ்ட் நான்காம் திகதி அதிகாலையில் தனது சகோதரியுடன் அவர் கதைத்ததாக பின்னர் கேள்விப்பட்டேன்.
அப்போது மூதூரில் பிரச்சினை தீவிரமடைந்திருப்பதாக கோவர்த்தனி கூறியதாக சகோதரி தெரிவித்திருந்தார்.
ஆனால் தனது சகோதரிக்கு கோவர்த்தனி தனது கைத்தொலைபேசி மூலமே அழைப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை ஊடகங்கள் மூலம் நாம் அறிந்தோம்.
திருகோணமலை வைத்தியசாலைக்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் எடுத்து வரப்பட்ட பின்னர் அடையாளம் காண்பதற்காக நான் நீதிவானால் எட்டாம் திகதி ஆகஸ்ட் 2006 இல் அழைக்கப்பட்டேன்.
உடலைப் பார்த்தபோது சிதைந்த நிலையில் இருந்தது. அவரின் முகத்தை ஓரளவு பார்க்க கூடியதாக இருந்தது. அத்துடன், அவரது கால் சிறிய விரல் ஏனைய விரல்களை விட நீண்டிருக்கும் அதனையும் வைத்து உடலை அடையாளம் காட்டினேன்.
இதன்போது என்னிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. நான் தமிழிலேயே வாக்கு மூலம் வழங்கினேன். ஆனால், அவர்கள் எம்மொழியில் பதிவு செய்தார்களென்று தெரியாது.
மேலும் எனது வாக்கு மூலம் எனக்கு வாசித்துக் காட்டப்படவும் இல்லை. நான் வாசிக்கவும் இல்லை.
இந்நிலையிலேயே அவ்வாக்குமூலத்தில் எனது வழமையான கையொப்பத்தை இட்டேன். ஆனால் நான் வாக்குமூலம் கூறும்போது ஒருவர் சிங்களத்தால் மொழிபெயர்த்துக் கூறினார்.
மீண்டும் உடல் விசாரணைகளுக்காக எடுக்கப்பட்டபோதும் என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் உடல் அடையாளம் காட்ட முடியாதபடி சிதைவடைந்திருந்தது.
கடந்த மாசி 26 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எனது சாட்சியம் தமிழில் பதிவு செய்யப்பட்டு எனக்கு வாசித்துக் காட்டப்பட்டது.
இவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது மூதூரில் துப்பாக்கி மற்றும் ஷெல் சத்தங்கள் கேட்டன.
அத்துடன் ஏராளமான மக்கள் மூதூர் நகரிலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். ஆனால் மக்களை எந்தவொரு அமைப்பும் இடம்பெயரச் சொல்லி அறிவித்தல் விடுத்ததாக நான் அறியவில்லை.
அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் எவரையும் சந்தித்து நான் இது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும் இல்லையெனத் தெரிவித்தார்.
இதேவேளை, இவரின் மரணத்துக்கு அரசோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ, எந்தவொரு அமைப்போ நஷ்ட ஈடு ஏதாவது வழங்கினார்களா என குறுக்கு விசாரணை செய்தபோது சாட்சி இல்லையெனப் பதிலளித்தார்.