புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 4 தொழிற்சங்க பிரதிநிதிகளையும் சப்ரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா. உறுப்பினர் ஏ.எம்.டி. இராஜன் தலையிட்டு விடுவித்துள்ளார்.
இரத்தினபுரியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொழிற்சங்கமொன்றின் தலைவர் உட்பட 4 தொழிற்சங்க பிரதிநிதிகளே கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் பெண்களாவர்.
இவர்கள் 4 பேரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் தமது காரியாலயத்தில் வைத்து பேசியதாக கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
119 பொலிஸ் அவசர தொலைபேசிக்குக் கிடைத்த தகவலொன்றினை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் இவர்களில் குடும்ப அங்கத்தினர்கள் இருவரை விடுவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது பயனளிக்க வில்லை.
அதன் பின்னர் காவத்தை தமிழ் மகாவித்தியாலய அதிபர் இருளப்பன் ரவி ஆசிரியர் காமராஜ், நகர வர்த்தகர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.பி. இராஜனிடம் கேட்டுக் கொண்டிருப்பதற்கமைய அவர் சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உண்மை நிலையை எடுத்துக் கூறியதனை தொடர்ந்து இவர்கள் 4 பேரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.