* 6 தோட்டங்களின் தொழிலாளர்கள் பாதிப்பு
நமுனுகுல தஸ்கர் பொட்லிங் கம்பனியின் கீழ் இயங்கி வரும் ஆறு தோட்டங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் கடந்த 50 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பின்னர் கடந்த திங்கட்கிழமை வேலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும். மற்றும் சிலருக்கு வேலை வழங்குவதற்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் உத்தியோகத்தர்களிடையே பதற்றம் நிலவுகிறது.
கனவரல்ல, கோணக்கலை, கந்தஹேனை, பிங்காரவ இந்துக்கலை, கின்லன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 286 உத்தியோகத்தர்களே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் இடை நடுவில் ஒருசில உத்தியோகத்தர்கள் வேலைக்கு சென்றுவிட்டனர். ஆனால் இவ்வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முன்னின்று செயல்பட்டவர்களுக்கும் வேலை நிறுத்தத்தின் போது நிர்வாகத்துடன் முரண்பட்டவர்களுக்குமே இந்த இடமாற்றமும் வேலை வழங்க மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் மேற்கொண்ட பொழுது அமைதியாகவும், நிர்வாகத்தினுடன் முரண்படாமலும் இருந்தவர்களுக்கு இடமாற்றமோ வேலை வழங்குவதற்கு மறுப்போ இல்லையென இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு வேலை வழங்குவதற்கு மறுக்கப்பட்ட உத்தியோகத்தர்களும் தெரிவித்தனர். ஆனால் இடமாற்றம் வழங்கப்பட்டவர்கள் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட புதிய தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லாமல் தொழிற்சங்கத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் தொழிற்சங்கத்தின் மீது அதிருப்தியடைந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.