பண்டாரவளைப் பகுதியில் மினி சூறாவளி வீசியதினால் டயரமா பெருந்தோட்டத்தின் 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இத் திடீர் மினி சூறாவளி, பலத்த மழையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்டதினால் 13 தொழிலாளர் குடியிருப்புக்களின் கூரைத் தகடுகள் வீசப்பட்டு சேதமடைந்துள்ளன.
இதனையடுத்து சுமார் 60 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி 13 குடும்பங்களும், தோட்ட பொது இடமொன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல்கள் பிரதி சுகாதார அமைச்சரும், பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதும்,பிரதி அமைச்சரின் பணிப்பின் பேரில் பொதுஜன தொடர்பு அதிகாரி வி.தினேஷ் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து, அவைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டார்.
இந்த மினி சூறாவளிக் காற்றும் பலத்த மழையும் 30 நிமிடங்கள் வரை நீடித்திருந்தது. அத்துடன் பதுளைப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.இடிமின்னல் பெருமளவில் ஏற்பட்டதினல் மின் துண்டிப்புக்களும் இடம்பெற்றன.
டயரமா தோட்டத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 13 வீடுகளைக் கொண்ட சிறிய வீட்டுத் திட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அனர்த்தத்தினால், பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இம் மழையும், மினி சூறாவளியும் மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை மட்டுமே நீடித்தது.