* அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு
மொனராகலை பிரதேச சபையின் உபதலைவர் அண்ணாமலை நாரயணன் முத்துலிங்கத்தின் படுகொலையானது ஜீரணிக்க முடியாத செயலாகுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலைக்கு காரணமானவர்களை அரசு கண்டறிந்து வெளிப்படுத்த தவறுமாயின் இதற்கு பாரதூரமான பின்விளைவுகளை முழு மலையகத்திலும் ஏற்படுத்தும்.
தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினாலும் அரச உளவு படையினரின் தேடுதல் நடவடிக்கைகளிலும் கொதித்துக் கொண்டிருக்கின்ற மலையக மக்களின் மனதில் இத்தகைய படுபாதகமான கொடூரகொலைச் செயல் உலர்ந்த பஞ்சின் மீது தீப்பந்தத்தை எறிந்ததைப்போல ஆகிவிடக்கூடாது என மலையக மக்கள் முன்னணி அஞ்சுகிறது.
நடைபெற்று வருகின்ற அநீதியான செயல்களுக்கு எதிராக துணிகரமாக குரல்கொடுத்து வந்த முத்துலிங்கத்தின் படுகொலை அரசியல் சார்ந்ததாக இருந்தால் மலையக மக்கள் முன்னணி அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் எனக் கருதக்கூடாது.
இத்தகைய வெறியாட்டத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அதற்கு பக்கபலமாக இருப்பதற்கு மலையக மக்கள் முன்னணி எத்தகைய விளைவையும் சந்திக்க தயாராகவே உள்ளது.
மலையகத்தில் இவ்வாறான கொலை கலாசாரத்தை தடுப்பதற்கு எந்த நிபந்தனையையும் ஏற்க நாம் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் சந்திரசேகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.