பண்டாரவளை டயரபா பெருந்தோட்ட "கிறின்ஹில்" பிரிவில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு அடிப்படைத் தேவைகளை உடன் பூர்த்தி செய்து கொள்ளும்வகையில், ஊவா மாகாணசபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார். தமது நிதியில் ஐம்பதாயிரம் ரூபாவினை வழங்கியுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கைக்குழந்தைகளுக்கு பால்மா வகைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பண்டாரவளையில் கடந்த 30 ஆம் திகதி மாலை பலத்த மழையுடன் சூறாவளிக் காற்று வீசியதால் டயரா பெருந்தோட்ட "கிறின்ஹில்" பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களது 13 தனிவீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டன. தொடர்ந்தும் பலத்த மழை பெய்ததினால் தொழிலாளர்களின் பல இலட்ச ரூபா பெறுமதியான உடைமைகள் சேதமடைந்தன.
இவ் அனர்த்தத்தினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தோட்ட ஆலயத்திலும், பொது மண்டபமொன்றிலும் தஞ்சம் அடைந்திருந்தனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், டயரபா தோட்ட வைத்தியசாலை மண்டபத்தில், நேற்று 31 ஆம் திகதி வெலிமடை பிரதேச செயலாளர் டபிள்யு.எம்.குணவர்தன தலைமையில் அவசர கூட்டமொன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தொழிலாளர்கள் சார்பில் ஊவா மாகாண சபையின் மலையகமக்கள் முன்னணி உறுப்பினர் அ.அரவிந்குமார், டயரபா தோட்டமுகாமையாளர் நிசாந்த ரன்தெனிய உள்ளிட்ட தோட்ட நிர்வாகிகள், கள உத்தியோகத்தர்கள், தோட்டமட்டத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தின் போது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான மீள் கட்டமைப்பு வசதிகளை, உடன் ஏற்படுத்திக் கொடுக்குமுகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இரவு முதல் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுவகைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்களை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளை "டிரஸ்ட்" நிறுவனம் மூலம் மேற்கொள்வதென்றும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் தொடர்பு கொள்வதென்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.